முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மின்நூலக திட்டம் விரைவுபடுத்தப்படுமா?

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் மின்நூலகம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த  வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Dinamani
Updated On : 5 ஏப்ரல் 2018, 8:43 am IST
பகிர்:

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் மின்நூலகம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த  வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. இது தவிர 99 கிளை நூலகங்களும், 86 ஊர்ப்புற நூலகங்களும், 2 பகுதி நேர நூலகங்களும் இம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் உள்ள முதல்நிலை நூலகம் உள்பட 12 நூலகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இங்கு நாளிதழ்கள், வார இதழ்கள், புத்தகங்களுக்கான தொகை ஒதுக்கீடும் அதிகம் வழங்கப்படுகிறது.
பாளையங்கோட்டையில் உள்ள  மாவட்ட மைய நூலகத்தில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், போன்ற போட்டித் தேர்வுகளுக்கான 45,000 புத்தகங்கள் உள்பட இங்கு 1.50 லட்சம் புத்தகங்கள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர். சிறு அரங்கு, பத்திரிகைகள் வாசிப்புக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு உள்ளன.
மின்நூலக திட்டம்: பள்ளிக் கல்வித் துறையின் செயலராக த.உதயச்சந்திரன் பொறுப்பேற்றபோது திருநெல்வேலி, கோவை, மதுரை உள்பட 6 மாவட்ட மைய நூலகங்களின் தரத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி மின்நூலகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டு, அதன்பின்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
உயர்கல்வி ஆய்வுப் படிப்புகளுக்கு உதவும் இ-புத்தகங்கள், இ-நாளிதழ்கள், கூடுதல் கணினி, நகல் எடுக்கும் இயந்திரம், எல்.இ.டி. புரொஜக்டர், கூடுதல் கட்டட வசதி உள்ளிட்டவற்றுடன் மின்நூலகம் இருக்க வேண்டுமெனவும், வைஃபை உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 
அதன்படி திருநெல்வேலியில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் மின்நூலக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான தொகையை அந்தந்த மாவட்ட நூலக ஆணைக் குழு மூலம் செலவிட அறிவுறுத்தப்பட்டதால்  திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் குறைந்தது.
இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த  வாசகர் ரஞ்சித்குமார் கூறியது: பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகம், மின் நூலகம் திட்டத்தால் பொலிவுபெறும் என்று நினைத்தோம். கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில் இந்த நூலகம் உள்ளதால் இளம்முனைவர், முனைவர், போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்கள் பலரும் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் அரிய புத்தகங்களுக்கு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், மின்நூலக திட்டத்தால் இங்கேயே ஆன்-லைன் முறையில் பெறலாம் என்று நினைத்தோம். ஆனால்,  மின்நூலக திட்டத்திற்கு அரசு சார்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லாததால், திட்டமிடப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.
ஐஏஎஸ், ஐபிஎஸ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே போட்டித் தேர்வுகளுக்கு ஏழை-எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மாவட்ட மைய நூலகம் முன்னணியில் உள்ளது. அதேநேரத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் இந்நூலகத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். நூலகத்திற்கு நிதி தேவைப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுறுத்தி நன்கொடையாளர்களைக் கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ஏனெனில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதும், போட்டித் தேர்வுக்கு தயார் செய்வதும் இளைஞர்களின் சிந்தனைத் திறனை அதிகரித்து நல்வழிப்படுத்துவதற்கு உதவும் என்றார்.
விரைவில் நடவடிக்கை : இதுகுறித்து நூலக வட்டாரங்கள் கூறியது: இந்த நூலகத்தில்  டெல்நெட் மென்பொருள் வசதி உள்ளது. இதன்மூலம் தெற்கு ஆசிய அளவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆய்வு நூல்களை படிக்கவும், சரிபார்த்துக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். இதுதவிர மின்னணு வாசிப்புக் கருவி,  ரூ.10 செலவில் ஒரு மணி நேரம் கணினியில் இணையதள சேவை பெறும் வசதி, ரூ.1-க்கு நகல் எடுத்துக் கொள்ளும் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. புரவலர்களை அதிகரிக்கவும், போட்டித் தேர்வு மாணவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் கூடிய பயிற்சிக்கூடம் கட்டுவதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் நூலக திட்டத்தைப் பொருத்தவரை அரசிடம் இருந்து இதுவரை புதிய ஆணைகள் வரவில்லை. அவை கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

"நடமாடும் நூலக சேவை தொடரும்'
கிராமப்புற மக்களிடம் வாசிப்பின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் நடமாடும் நூலகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிவு செய்து, 1999-ம் ஆண்டில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்களை தமிழக அரசு  வழங்கியது. சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு இந்த வாகனத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடமாடும் நூலகத்திற்கு ஆண்டுதோறும் 500 முதல் 1,000 புத்தகங்கள் புதிதாக வழங்கப்படுகின்றன. திருநெல்வேலியில் இருந்து 20 முதல் 30 கி.மீ. தொலைவுக்குள் உள்ள 40 கிராமங்களில் இந்த நடமாடும் வாகனம் வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்த நூலகத்தில் ஒரு நூலகர், வாகன ஓட்டுநர் ஆகியோர் பணியில் உள்ளனர்.
காரையாறு, காணிக்குடியிருப்பு போன்ற மலை கிராமங்களுக்கும் நடமாடும் நூலக சேவை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என நூலக அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments