நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஜாக்டோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஜாக்டோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சேதுராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி மீறலை கண்டித்தும், தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய பிற பொறுப்பு நியமனங்களின்போது, உரிய பணி மூப்பு தகுதியுடையோர் பட்டியலில் உள்ளவாறு பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மூட்டா அமைப்பின் பொதுச்செயலர் நாகராஜன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் பிச்சைக்கனி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொருளாளர் கணேசன், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் மனோகரன், மாவட்டச் செயலர் ஆசீர் சார்லஸ்நீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.