மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும்
மக்களவைத் தேர்தலில் தமிழக நலன் காக்க மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்றார்
மக்களவைத் தேர்தலில் தமிழக நலன் காக்க மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கைபரப்புச் செயலர் தங்கத்தமிழ்செல்வன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும் என நம்புகிறோம். மக்களவைத் தேர்தலில் மாநில நலனைக் காக்கும் வகையில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவே விரும்புகிறோம்.
அதற்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில் கடைசி நிமிடத்தில்கூட கூட்டணி அமையும்.
அதிமுக- பாஜக- பாமக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. மக்கள் அந்தக் கூட்டணியை ஏற்க மாட்டார்கள். அதிமுக மற்றும் பாஜக மீதான வெறுப்பு வாக்குகளும், அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் வாக்குகளும் அமமுக வேட்பாளர்களுக்கே கிடைக்கும்.
தேசிய கட்சிகள் மாநிலங்களின் நலனில் முழுமையாக அக்கறை செலுத்தாத நிலை உள்ளது. அதனால்தான் தனித்துப் போட்டியிடவும் தயாராக அமமுக உள்ளது. எங்கள் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீர்வு, மேக்கே தாட்டு அணைத் திட்டத்தை ரத்து செய்தல், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் எரிவாயு திட்டங்களைக் கைவிடுதல், ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கே ஆதரவளிப்போம்.
மத்திய-மாநில அரசுகளின் உதவித்தொகை திட்டங்கள் தேர்தலைக் கருத்தில்கொண்டே அமல்படுத்தப்படுகிறது. கவர்ச்சிகரமான திட்டங்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். நடைபெற உள்ள தேர்தலில் மக்கள் பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்திக்காட்டுவார்கள் என்றார் அவர்.
பேட்டியின்போது பொதுக்குழு உறுப்பினர் கலா பத்மபாலா, எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகி வேல்பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.