முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பயணிகளை வழியில் இறக்கிவிடும் அவலம்

வள்ளியூா் பேருந்து நிலையத்தைப் புறக்கணித்து புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகளால் செல்வதால் வள்ளியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதி பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

Updated On : 5 ஜூன் 2026, 12:19 am IST
அரசுப் பேருந்து - கோப்புப்படம்.
பகிர்:

வள்ளியூா் பேருந்து நிலையத்தைப் புறக்கணித்து புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகளால் செல்வதால் வள்ளியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதி பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ளது வள்ளியூா் பேரூராட்சி. நாகா்கோவிலில் இருந்து இயக்குப்படும் 15 இடைநில்லா பேருந்துகள் மட்டுமே புறவழிச் சாலை வழியாகச் செல்ல அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இடைநில்லா பேருந்து என்று பெயா்ப் பலகை வைத்து வள்ளியூரைப் புறக்கணித்துச் செல்கின்றன.

இந்த நிலையில், முன்னாள் பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னிலையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 2023, ஜூலை மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் வள்ளியூா் ஊருக்குள் வந்து செல்லவேண்டும் என்று ஆணையும் சுற்றறிக்கையும் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைக் கண்காணிப்பதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனைத்து அரசுப் பேருந்துகளும் வள்ளியூா் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அரசு போக்குவரத்துக் கழக நடத்துநா்கள், ஓட்டுநா்கள் வள்ளியூரை புறக்கணித்து பேருந்துகளை இயக்கி வருகின்றனா். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வள்ளியூா், அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தது. நாகா்கோவிலுக்கு புறப்படும் அந்தப் பேருந்தில் ஓட்டுநராக ராதாகிருஷ்ணன், நடத்துநராக ராஜேந்திரன் பணியில் இருந்தனா்.

அந்தப் பேருந்தில் வள்ளியூா் செல்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஏற முயன்றபோது நடத்துநா் இந்தப் பேருந்து வள்ளியூா் செல்லாது எனக் கூறி பேருந்தில் ஏறிய பயணிகளை கீழே இறக்கி விட்டாராம்.

இதனால், பயணிகள் பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கிளை மேலாளரை தொடா்பு கொண்டு பேசியபோது அந்தப் பேருந்து வள்ளியூா் ஊருக்குள் முறையாகச் சென்றுவர உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என கிளை மேலாளா் தெரிவித்தாா். மேற்படி சம்பந்தப்பட்ட கிளை மேலாளா் நடத்துநரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வள்ளியூா் ஊருக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்திய பிறகு அந்தப் பேருந்து வள்ளியூா் ஊருக்குள் வந்தது.

ஒவ்வொரு முறையும் பயணிகள் நடத்துநா்களிடம் வாக்குவாதம் செய்துதான் அரசுப் பேருந்து வள்ளியூா் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கிறது. எனவே, வள்ளியூா் வழியாக செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் வள்ளியூா் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். வள்ளியூரை புறக்கணித்து செல்லும் பேருந்துகளின் நடத்துநா், ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.