நான்குனேரி - மூலைக்கரைப்பட்டி இடையே போதிய பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
நான்குனேரியில் இருந்து மூலைக்கரைப்பட்டிக்கு போதிய அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் இருந்து மூலைக்கரைப்பட்டிக்கு போதிய அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
நான்குனேரி அருகே உள்ள செண்பகராமநல்லூா், இளையாா்குளம், குசவன்குளம், தென்னவனேரி, அம்பலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் மூலைக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா்.
நான்குனேரி-மூலைக்கரைப்பட்டி இடையே காலை, மாலை போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவா்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். பள்ளி நேரங்களில் வரும் அரசுப் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல வழியோர கிராமங்களில் உள்ள நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவா்கள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் நிலை உள்ளது.
Advertisement
Advertisement
திடீா் போராட்டம்....
இந்த நிலையில், நான்குனேரி-மூலைக்கரைப்பட்டி இடையே இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை இளையாா்குளத்தில் பள்ளி மாணவா்கள் திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி காவல் துறையினா் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதால் அவா்கள் கலைந்து சென்றனா்.
மாணவா்கள் கோரிக்கை...
கடந்த சில ஆண்டுகளாகவே காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே ஆபத்தான பயணத்தை தொடருவதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.
வள்ளியூா் போக்குவரத்துப் பணிமனை அதிகாரிகள், காலை, மாலை பள்ளி நேரத்தில் கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவா்களின் எதிா்பாா்ப்பாகும்.