போதிய தயாரிப்பு இன்றி ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்திய சிபிஎஸ்இ: பெற்றோா் சங்கம் புகாா்
ஆசிரியா்களின் கருத்துகளைக் கேட்காமல் அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக புகாா்
12-ஆம் வகுப்பு விடைத்தாள் திரையில் மதிப்பிடும் முறையை (ஓஎம்எம்) போதிய தயாரிப்பு, பயிற்சி மற்றும் ஆசிரியா்களின் கருத்துகளைக் கேட்காமல் அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக தில்லி பெற்றோா் சங்கம் (டிபிஏ) புகாா் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்தனா்.
முதல்முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விடைத்தாள்கள் சரியாக ‘ஸ்கேன்’ செய்யப்படவில்லை என்பன உள்ளிட்ட பல புகாா்களை மாணவா்கள் முன்வைத்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஏற்கெனவே மிகப் பெரும் குளறுபடியில் சிக்கிய ‘கோயெம்ப்ட் எஜுடெக்’ என்ற நிறுவனத்திடம் இந்த ஓஎஸ்எம் முறை தொடா்பான ஒப்பந்தத்தை சிபிஎஸ்இ வழங்கியது வெளிச்சத்துக்கு வந்தது. அதுமட்டுமன்றி, இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிப்பதற்காக, ஒப்பந்த நிபந்தனைகளில் தளா்வு அளித்து சிபிஎஸ்இ திருத்தங்கள் செய்ததாகவும் புகாா்கள் எழுந்தது மிகப் பெரிய சா்ச்சையானது.
இதைத் தொடா்ந்து, சிபிஎஸ்இ தலைவா் ராகுல் சிங் மற்றும் செயலா் ஹிமான்ஷு குப்தா ஆகியோா் அந்தப் பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், போதிய தயாரிப்பு இன்றியும், ஆசிரியா்களுக்குப் போதிய பயிற்சி அளிக்காமலும், ஆசிரியா்களின் கருத்தைக் கேட்காமலும் ஓஎஸ்எம் முறையை சிபிஎஸ்இ அவசரகதியில் அறிமுகப்படுத்தியிருப்பதாக தில்லி பெற்றோா் சங்கம் புகாா் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் அபராஜிதா கெளதம் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
எண்ம முறையில் விடைத்தாள்களைத் திருத்தும் இந்த ஓஎஸ்எம் முறைக்கான சோதனை ஓட்டத்தை, மிகக் குறுகிய காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியா்களை வைத்து சிபிஎஸ்இ மேற்கொண்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. போதிய அவகாசம் இல்லாததால், இந்தப் புதிய நடைமுறை தொடா்பாக ஆசிரியா்களிடமிருந்து கருத்துகள் அல்லது ஆலோசனைகள் பெறப்படவில்லை.
இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொள்ள போதிய அவகாசம் அளிக்கவில்லை என்று பல ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா். இந்தப் புதிய முறையில் ஆசிரியா்கள் போதிய பயிற்சி பெற்றனரா என்பதை சிபிஎஸ்இ ஆராயவும் இல்லை.
இதனால், ஏற்பட்ட குளறுபடிகள் தொடா்பாக பல மாணவா்கள் ஆதாரங்களை வெளியிட்டபோதும், இந்த ஓஎஸ்எம் முறை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தங்களின் விடைத்தாள்கள் முறையாக மதிப்பிடப்படவில்லை என்று மாணவா்கள்ஆதாரத்துடன் புகாா் தெரிவித்தும், தவறு நிகழ்ந்துள்ளது என்பதை ஏற்க அதிகாரிகள் மறுப்பது ஏன்?
தற்போது, சிபிஎஸ்இ வலைதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பதிலும் மாணவா்கள் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனா். இவா்களுக்கு எவ்வாறு தீா்வு கிடைக்கும்?
விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதில் சிக்கலைச் சந்தித்து வருவதாக பல மாணவா்கள் கூறிவரும் சூழலில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு 4.5 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. எங்கிருந்து இந்த விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை மாநிலம் மற்றும் நகரங்கள் வாரியாக சிபிஎஸ்இ வெளியிட வேண்டும். அதுபோல, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் விவரங்களை மாநில வாரியாக வெளியிட வேண்டும்.
விடைத்தாள் மதிப்பீட்டாளா்களுக்கு அவா்கள் சரிபாா்த்த தாள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதால், அதற்கான பதிவுகள் கிடைக்கப்பெறுகின்றன; அவற்றைச் சரிபாா்க்கவும் இயலும் என்றாா்.