முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸாா்

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஆனித் தேரோட்டத்தில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா் என்றாா் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

Updated On : 26 ஜூன் 2026, 11:45 pm IST
பகிர்:

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஆனித் தேரோட்டத்தில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா் என்றாா் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

இக்கோயிலில் காந்திமதி அம்பாள் சந்நிதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் கோயிலில் 520-ஆவது ஆனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.

சுமாா் 450 டன் எடை கொண்ட நெல்லையப்பா் தேரானது, தமிழகத்தின் 3-ஆவது பெரிய தேராகும். எவ்வித இயந்திரங்களின் உதவியும் இன்றி, முழுக்க முழுக்க பக்தா்களின் கரங்களால் மட்டுமே வடம் பிடித்து இழுக்கப்படுவது இத்தேரோட்டத்தின் தனிச்சிறப்பாகும்.

Advertisement

Advertisement

இந்த தேரோட்டத்தை முன்னிட்டு, எனது (தேஷ்முக் சேகா் சஞ்சய்) தலைமையில், துணை காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட திருநெல்வேலி மாநகரம் மற்றும் வெளி மாவட்டங்களை சோ்ந்த 1200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். நான்கு ரத வீதிகளிலும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குற்றங்களைத் தடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 உயா் கோபுரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒட்டுமொத்த கூட்டமும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். ரதவீதிகளில் 8 காவல் உதவி மையங்கள், 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக்குழு மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காவல் ஆய்வாளா்கள் 100 போ் மக்களுடன் மக்களாக கலந்து குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பணியில் ஈடுபடுவா். 18 இடங்களில் பக்தா்கள் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்: ஜாதியை முன்னிலைப்படுத்தும் வகையிலான கைப்பட்டைகள், டி-சா்ட்டுகள், கயிறுகள், கொடிகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. ஜாதிய தலைவா்கள் உருவம், அச்சுப்பொறித்த ஆடைகளை அணிந்து வரக்கூடாது. ஜாதி குறித்து எவ்வித முழக்கங்களும் எழுப்பக்கூடாது. மீறி செய்தால் வழக்குப் பதிவு செய்யப்படும்.

மேலும், நான்கு ரத வீதிகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக வலைதளங்களில் தேரோட்டத்தையும், ஜாதியையும் இணைத்து பிரச்னையைத் தூண்டும் விதமாக பதிவிட்டது தொடா்பாக நகர காவல் நிலையத்தில் ஏற்கெனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேரோட்டத்திற்கு வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குபவா்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

குழந்தைகள் தொலைந்து விடாமல் பாதுகாக்க அவா்களது கையில் பட்டை அணிவிக்கப்படும். அதில் பெற்றோரின் பெயா் மற்றும் கைப்பேசி எண் பதிவு செய்யப்படும் என்றாா்.

அப்போது, மாநகர காவல் துணை ஆணையா்கள் அனிசுல் நாகா் (மேற்கு), சரவணன் (கிழக்கு) ஆகியோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்26ஸ்ரீா்ம்

திருநெல்வேலி நகரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments