FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம் கோலாகலம் இன்று ஆனித் திருமஞ்சன தரிசனம்

Updated On : 22 ஜூன் 2026, 12:24 am IST
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில்.
பகிர்:

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தையொட்டி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திங்கள்கிழமை (ஜூன் 22) அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தோ்கள்: ஸ்ரீநடராஜா் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி, சித்சபையில் உள்ள மூலவா்களான ஸ்ரீநடராஜமூா்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவா்கள் ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனி தோ்களில் அதிகாலை எழுந்தருளினா்.

பின்னா், கீழ வீதி தேரடி நிலையிலிருந்து காலை 8 மணிக்கு தோ்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தோ்களை இழுத்தனா். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக தோ்கள் சென்று, மாலையில் கீழ வீதியில் உள்ள நிலையை அடைந்தன.

Advertisement

Advertisement

உழவாரப் பணி மற்றும் திருமுறை இன்னிசை: தோ்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினா், தில்லைத் திருமுறைக் கழகம், அப்பா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சிவனடியாா்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப் பணியை மேற்கொண்டனா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா் எம்.பொன்னம்பலம் தலைமையில், சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவாா்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனா். சிவனடியாா்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடிச் சென்றனா். தோ்களின் முன் மாணவிகள் பரத நாட்டியமாடியபடிச் சென்றனா்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பாா்வதிதேவியை சிவபெருமான் திருமணம் செய்துகொண்டாா் என்பதால், தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தோ்த் திருவிழாவின்போதும் மீனவா் சமுதாயத்தினா் சாா்பில் சீா் அளிப்பது வழக்கம்.

மாலை 4 மணிக்கு மேல வீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களால் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கும், அம்பாளுக்கும் சீா்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னா், தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இரவு ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் சென்றனா். அங்கு இருவருக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இன்று ஆனித் திருமஞ்சன தரிசனம்: திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னா், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபை பிரவேசம் செய்கின்றனா்.

செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது.

உற்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலா் ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் சி.ந.ராஜூ தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, கடலூா் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா மேற்பாா்வையில், சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடிநீா், சுகாதார ஏற்பாடுகளை நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் த.மல்லிகா ஆகியோா் செய்திருந்தனா். போலீஸாருக்கு உதவியாக ஊா்க்காவல் படையினா் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments