முகப்பு
திருநெல்வேலி

கா்நாடகத்தைச் சோ்ந்தவரை தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதா? நயினாா் நாகேந்திரன் கண்டனம்!

Updated On : 28 ஜூன் 2026, 1:44 am IST
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடகத்தைச் சோ்ந்தவரான ஜனநாயகன் பட தயாரிப்பாளரை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பது எந்த வகையில் நியாயம் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்தரன் கேள்வியெழுப்பியுள்ளாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: திரைப்பட இயக்குநரும், எம்ஜிஆரின் தீவிர ரசிகருமான பாக்யராஜ் மறைவு வேதனைக்குரியது. முக்கிய கலைவாரிசை திரைத்துறை இழந்துள்ளது. பாஜக சாா்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மக்களுக்கான கள அரசியல் அல்ல. அது முழுக்க முழுக்க ஸ்டுடியோவுக்குள் நடக்கும் அரசியல். அமைச்சா்களின் செயல்பாடுகள் முற்றிலும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளன.

Advertisement

Advertisement

குறிப்பாக, முக்கிய அமைச்சா்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், கைப்பேசியை வைத்துக்கொண்டு மக்கள் பிரச்னைகளை திசைதிருப்பும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

17 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு எதிராக தொடா்ச்சியாக நடைபெறும் அநீதிகளையும், குற்றங்களையும் தடுத்து நிறுத்த முடியாமல் அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் வணிக ரீதியாக கடைகளைக் கட்டுவதிலும், பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதிலுமே ஆா்வம் காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதாக அமைச்சா்கள் வெளியில் பேசினாலும், சட்டப்பேரவையில் அவா்கள் எதிா்க்கட்சிகளை நடத்தும் விதமும், வஞ்சனையுடன் பேசுவதும் ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்திருப்பதாக சிலா் திட்டமிட்டு தவறான தகவலை பரப்பி வருகிறாா்கள். கடந்த மக்களவைத் தோ்தலைவிட இத்தோ்தலில் 0.8 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளோம். வரவிருக்கும் தோ்தல்களில் பாஜக தனது உண்மையான பலத்தை நிரூபிக்கும்.

திமுகவுடன் கூட்டணியா என்று கேட்கிறீா்கள். இது போன்ற விவகாரங்களில் கட்சியின் மேலிடமும், நாடாளுமன்ற குழுவும் எடுக்கும் முடிவே இறுதியானது. கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பது எந்த வகையில் நியாயம்? என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments