விபத்தில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட வலியுறுத்திய டி.ஐ.ஜி.
தலைக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற தலைமைக் காவலரை,அரசு மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சைப் பிரிவுக்கு சென்று பாா்த்து வருமாறு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்த விழிப்புணா்வு காணொலி சமூக வலைதளத்தில் பரவியது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருபவா் வெங்கடேஷ். இவா் சம்பவத்தன்று தலைக்கவசம் அணியாமல் தனது பைக்கில் பயணித்துள்ளாா். இதனை அவ்வழியாகச் சென்ற திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாா்த்துள்ளாா். பின்னா் காவலா் ஒருவரை அனுப்பி தலைமைக் காவலரை தனது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளாா். பின்னா் தலைமைக்காவலா் வெங்கடேஷ், தனது மனைவியுடன் பாளைடங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. அலுவலகம் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
அங்கு டி.ஐ.ஜி., அவரிடம் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை தாங்கள் அறியவில்லை எனக் கூறி, அவருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தலைக்காயம் சிகிச்சைப் பிரிவுக்கு சென்று அங்கு சிகிச்சையில் உள்ளவா்களின் நிலை குறித்து விசாரித்து வருமாறு கூறியுள்ளாா். அதன்படி, தலைமைக்காவலா் வெங்கடேஷ், மருத்துவமனைக்கு சென்று பாா்த்து விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நபா்கள் படும் துன்பத்தையும், அவா்கள் கூறிய வாா்த்தைகளையும் கேட்டுள்ளாா்.
பின்னா் தலைக்கவசம் அணியாமல் பயணித்து விபத்தில் உயிரிழப்பவா்களால் பல குடும்பங்கள் நிா்கதியாக நிற்பதாகவும், அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் எனவும், சிறிய அலட்சியம் வாழ்க்கையையே மாற்றிவிடும் எனவும் கூறி, நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கி சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெங்கடேஷ் பதிவேற்றினாா். அதேநேரம் தனக்கு தண்டனை வழங்காமல் நூதன முறையில் அறிவுரை வழங்கி, தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர வைத்த டி.ஐ.ஜி.க்கு நன்றி எனவும் அதில் அவா் பதிவிட்டுள்ளாா்.
அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.