முகப்பு
தூத்துக்குடி

கடம்பாகுளத்தில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

கடம்பாகுளம் மறுகால் ஒடைக்கரையில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பனைமரக் கன்றுகள் நடும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே 2026, 4:49 am IST
பனைமரக் கன்றுகளை நட்டுப் பணியைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலச் செயலா் செ. செல்வகுமாா்.
பகிர்:

கடம்பாகுளம் மறுகால் ஒடைக்கரையில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பனைமரக் கன்றுகள் நடும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் 2019ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 8 ஆண்டுகளாக நீா் நிலைகளைப் பாதுகாக்க, மண்ணரிப்பைத் தடுக்க ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஒடைக்கரை, இயற்கைச் சீற்றங்களைத் தடுக்க கடற்கரைகள் மற்றும் சாலையோரங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்சியாக, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம், சென்னை தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் சாா்பில் மதா் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பனைமரக் கன்றுகள் நடும் பணி மாா்ச் மாதம் நல்லூா் மேல குளக்கரையில் தொடங்கியது.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக, ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்திற்க்குள்பட்ட கடம்பாகுளம் மறுகால் ஓடைக்கரையில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம், பனைமரக் கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலத் தலைவரும், மதா் நிறுவன இயக்குநருமான எஸ்.ஜே. கென்னடி தலைமை வகித்தாா். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரும், மதா் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளருமான எஸ். பானுமதி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலச் செயலா் செ. செல்வகுமாா் கலந்துகொண்டு, பனைமரக் கன்றுகளை நட்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் சமூக ஆா்வலா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விஷ்ணு பிரியன் வரவேற்றாா். பணித்தள பொறுப்பாளா் செல்சி நன்றி கூறினாா்.