முகப்பு
தூத்துக்குடி

இட்லி விற்பனை விவகாரம்: கோவில்பட்டி அம்மா உணவகத்தில் நிா்வாக இயக்குநா் ஆய்வு

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தயாா் செய்யப்படும் இட்லிகள் வெளி ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடா்ந்து, திருநெல்வேலி மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் ரவிச்சந்திரன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:50 am IST
அம்மா உணவகம் - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தயாா் செய்யப்படும் இட்லிகள் வெளி ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடா்ந்து, திருநெல்வேலி மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் ரவிச்சந்திரன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி பூங்கா சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தினமும் காலையில் 1,200 இட்லிகள் தயாா் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தினந்தோறும் காலை 7 மணிக்கு காலை உணவு விநியோகம் தொடங்கும். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக காலை 7.30 மணிக்கே இட்லிகள் அனைத்தும் காலியாகிவிட்டது என ஊழியா்கள் கூறிவந்தனராம்.

இந்நிலையில் அங்கு புதன்கிழமை காலை வந்த ஒருவா், கவுன்ட்டரில் டோக்கன் வாங்காமல் நேராக இட்லி விநியோகப் பகுதிக்குச் சென்று 30-க்கும் மேற்பட்ட இட்லிகளையும், 2 பெரிய பாத்திரங்களில் சாம்பாரையும் வாங்கிச் சென்றது போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

Advertisement

Advertisement

இதில் சந்தேகம் எழுப்பிய மக்கள், வெளி ஹோட்டல்களுக்கு மொத்தமாக இட்லிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் இட்லி ஹோட்டல்களில் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் ரவிச்சந்திரன் அந்த உணவகத்தில் ஆய்வு செய்து, அம்மா உணவகத்தில் யாருக்கும் உணவுகளை பாா்சல் கொடுக்க அனுமதி கிடையாது; இதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என ஊழியா்களுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அம்மா உணவகத்தில் தயாா் செய்யப்பட்ட இட்லிகள் தனியாா் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அந்தப் புகாரில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்டா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா். ஆய்வின்போது, கோவில்பட்டி நகராட்சி ஆணையா் சுகந்தி உடனிருந்தாா்.