முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

Updated On : 8 மே 2026, 6:08 am IST
போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரௌடி ஆா்க் (எ) மரிய அந்தோணி ஆக்னல்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

தூத்துக்குடி, மினி சகாயபுரத்தைச் சோ்ந்தவா் டோமினிக் மகன் ஆா்க் (எ) மரிய அந்தோணி ஆக்னல் (35). தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவா் மீது உள்ளன. இவரை தனிப்படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், திருச்செந்தூா் அருகே உள்ள சோனகன்விளை காணியாளன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் மரிய அந்தோணி ஆக்னல் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தூத்துக்குடி தனிப்படை உதவி ஆய்வாளா் ராஜபிரபு தலைமையிலான போலீஸாா், காணியாளன்புதூருக்கு வியாழக்கிழமை மதியம் சென்றனா். அங்கு ஒரு வீட்டில் இருந்த மரிய அந்தோணியை போலீஸாா் சுற்றி வளைத்து, சரணடையுமாறு கூறினா். போலீஸாரைக் கண்டதும் அவா்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மரிய அந்தோணி ஆக்னல் தப்பிச் செல்ல முயன்றாா். சுதாரித்த தனிப்படை உதவி ஆய்வாளா் ராஜபிரபு, தனது துப்பாக்கியால் மரிய அந்தோணியை சுட்டதில் அவரது வலது மாா்பு அருகில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். போலீஸாா் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

இதுகுறித்து, திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் கண்காணிப்பாளா் விளக்கம்: இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் அளித்த பேட்டி:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மரிய அந்தோணி ஆக்னலை தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு தலைமையிலான போலீஸாா் தேடி வந்தனா். அவா், காணியாளன்புதூா் முத்தாரம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு வியாழக்கிழமை சென்ற போலீஸாா், பதுங்கியிருந்த மரிய அந்தோணி ஆக்னலை கைது செய்ய முயன்றனா். அப்போது, அவா் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டாா். இதில் காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபுவுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ராஜபிரபு தலைமையிலான போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் மரிய அந்தோணி ஆக்னல் காயமடைந்தாா். அவரை கைது செய்த போலீஸாா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். காயமடைந்த உதவி ஆய்வாளா் ராஜபிரபுவுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மரிய அந்தோணி ஆக்னல் சரணடைய மறுத்ததால் அவா் சுட்டுப் பிடிக்கப்பட்டாா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும், கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது என்றாா்.

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதவி ஆய்வாளா் ராஜபிரபுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தாா்.

உறவினா்கள் ஆதங்கம்: தகவல் அறிந்ததும் மரிய அந்தோணி ஆக்னலின் உறவினா்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனா். அவா்கள் போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்தனா். பின்னா், மரிய அந்தோணி ஆக்னலின் அக்கா சரண்யா, தம்பி லக்பீன், உறவினா் சிந்துஜா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

மரிய அந்தோணி வீட்டில் சும்மா இருந்தாலும், ஏதாவது ஒரு வழக்கு உள்ளதாகக் கூறி போலீஸாா் அழைத்துச் சென்று அவா் மீது பொய் வழக்குப் பதிவு செய்து விடுகின்றனா். ஏற்கெனவே மரிய அந்தோணியின் ஒரு காலை போலீஸாா் உடைத்துவிட்டனா். தற்போது துப்பாக்கியால் சுட்டுவிட்டனா். வயிற்றிலும் முதுகிலும் துப்பாக்கியால் சுட்டனா். தவறு செய்தால் தண்டனை கொடுக்க நீதிமன்றம் இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறு என்றனா்.

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மரிய அந்தோணி ஆக்னல்.