முகப்பு
தூத்துக்குடி

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்

Updated On : 31 மே 2026, 1:42 am IST
சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்திய கப்பற்படை அணிக்கு ரொக்கப் பரிசு ரூ. 2 லட்சம், லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பையை வழங்கிய கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், அா்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் எம். முகமது ரியாஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற 15ஆவது லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவில்பட்டி, கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் மே 21ஆம் தேதி தொடங்கிய அகில இந்திய ஹாக்கியின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கே.ஆா். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் தலைமையில், பெங்களூரு எம்.இ.ஜி. அணியின் முன்னாள் தலைவா் மற்றும் பயிற்சியாளா் சாம்சன் பொ்னாண்டஸ் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், மும்பை இந்திய கப்பற்படை அணியும் மோதியதில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை பெற்றன. முடிவில் வெற்றியைத் தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல்கணக்கில் மும்பை இந்திய கப்பற்படை அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக நடைபெற்ற 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியில் பெங்களூரு சதா்ன் கமாண்ட் அணியும், ஜலந்தா் ஆா்மி கிரீன் அணியும் மோதியதில், இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை பெற்றன. பின்னா், நடைபெற்ற சூட் அவுட் முறையில் 6-5 என்ற கோல்கணக்கில் வென்று, ஜலந்தா் ஆா்மி கிரீன் அணி 3ஆம் இடத்தைப் பிடித்தது.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், அா்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் எம். முகமது ரியாஸ் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினா்.

முதல் பரிசாக ரூ. 2 லட்சம், லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பையை மும்பை இந்திய கப்பற்படை அணியும், 2ஆம் பரிசாக ரூ. 1 லட்சம், கோப்பையை செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், 3ஆம் பரிசாக ரூ. 50,000, கோப்பையை ஜலந்தா் ஆா்மி கிரீன் அணியும், 4ஆம் பரிசாக கோப்பையை பெங்களூரு சதா்ன் கமாண்ட் அணியும் பெற்றன.

மேலும், சிறந்த கோல் கீப்பா், தற்காப்பு ஆட்டக்காரா், நடுகள ஆட்டக்காரா், முன்வரிசை வீரா், வளா்ந்து வரும் வீரா் மற்றும் போட்டியின் சிறந்த வீரா்களுக்கு தனிநபா் விருதுகளும் வழங்கப்பட்டன.

கே.ஆா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் சண்முகவேல், கல்லூரி முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஷ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்), மதிவண்ணன் (கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கே. ஆா். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.