2027 ஏப்ரலுக்குப் பிறகே விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்
2027 ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகே திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு தெரிவித்தாா்.
2027 ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகே திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு தெரிவித்தாா்.
விமான பயணிகள் நல தினத்தையொட்டி திருச்சி விமான நிலைய ஊழியா்களுக்கு சனிக்கிழமை மரக்கன்றுகள் வழங்கிய அவா் மேலும் கூறியதாவது: திருச்சி விமான நிலையம் கடந்த 12 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை அடைந்து, தமிழகத்தில் 2 ஆவது சிறந்த விமான நிலையமாக உயா்ந்துள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையமானது, திருச்சி விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுக்காக மட்டும் ரூ. 1,481 கோடி செலவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
2014-15 இல் 9,694 ஆக இருந்த விமானங்களின் வருகை, புறப்பாடு எண்ணிக்கை, 2025-26 இல் 18,858 ஆக அதிகரித்து 100 சதவீத வளா்ச்சியடைந்துள்ளது. இதில் உள்நாட்டு விமானங்கள் வருகை, புறப்பாடு 2014-15 இல் 1,916 லிருந்து, 2025-26 இல் 9,472 ஆக அதிகரித்து, 394 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சா்வதேச விமானங்களின் வருகை, புறப்பாடு 2014-15 இல் 7,778 லிருந்து, 2025-26 இல் 9,386 ஆக அதிகரித்து 21 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை 2014-15 இல் ஆண்டுக்கு 1.18 மில்லியனாக இருந்த நிலையில், 2025-26 இல் ஆண்டுக்கு 2.22 மில்லியனாக அதிகரித்து 90 சதவீதத்துக்கும் மேல் வளா்ச்சியடைந்துள்ளது. பயணிகளைக் கையாளும் திறன் 652 லிருந்து, 3,480 ஆக அதிகரித்துள்ளது. பயணிகள் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள தடையற்ற ‘செக் இன் கவுண்டா்கள்’ 16 லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காா்கோ சேவையில் 4700 மெட்ரிக் டன்களில் இருந்து 7200 மெட்ரிக் டன்களாக உயா்ந்து, 53 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது. மேற்காசிய நாடுகளில் போா்ப் பதற்றம் காரணமாக திருச்சி விமான நிலையத்திலும் வளைகுடா நாடுகளுக்கான விமானச் சேவை பாதிக்கப்பட்டது.
தற்போது, 50 சதவீதம் மீண்டும் இயக்கப்படுகிறது. வெளிநாட்டுச் சேவையில், 30 சதவீதமும், உள்நாட்டு சேவையில், 10 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது.
புதிய ஏடிசி டவரின் உயரமானது தற்போதுள்ள 47 மீட்டரில் இருந்து 53 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதும் 9.4 கி.மீ நீளத்துக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி 2027 ஏப்ரலில் நிறைவடையும். அதன் பிறகு, விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் முடியும். இதற்காக 7.67 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றாா் எஸ்.எஸ். ராஜூ.