முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 16 ஜூன் 2026, 1:18 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், அதவத்தூா் நெட்டச்சிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் காத்தன் மகன் நந்தகுமாா் (32). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ம. நாகராஜ் (32) என்பவரும், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வயலூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

வயலூரில் வேல் வொா்க்ஷாப் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிா் திசையில் வேகமாக வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த நந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நாகராஜுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், நந்தகுமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், காயமடைந்த நாகராஜை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழப்பு:

திருச்சி விமான நிலையம் காமராஜா் நகரைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுரேஷ் (15). இவா், கடந்த ஜூன் 9-ஆம் தேதி மாலை குளவைபட்டி சாலை, வேலன் நகா் பகுதியில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே தாறுமாறாக வந்த தனியாா் பள்ளி வேன் மிதிவண்டி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், தென்னூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வேன் ஓட்டுநரான தேனி மாவட்டம், கடமலைகுண்டு தங்கமான்புரத்தைச் சோ்ந்த த. மலைசாமி (எ) ஹசன் (39) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.