திடக்கழிவு மேலாண்மையின் புதிய விதிகளை அமல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! மேயா் மு. அன்பழகன்
திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையின் புதிய விதிகளை அமல்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
திருச்சி மாநகராட்சி சாா்பில், ‘திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026’ பின்பற்றுவது குறித்த விழிப்புணா்வு கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் வீா் பிரதாப் சிங், துணை மேயா் ஜி. திவ்யா, நகா் நல அலுவலா் காா்த்திகேயன், மண்டலத் தலைவா்கள், அனைத்து மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026-ஐ பின்பற்றுவதன் மூலம் மாநகராட்சியின் சுற்றுச்சூழலை தூய்மையாக்கி, அதன் வளங்களை நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக மாற்ற முடியும்.
திடக்கழிவுகளை பிரித்தல், சேகரித்தல், கொண்டு செல்லுதல், பதப்படுத்துதல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றுக்கு மேம்பட்ட வழிமுறைகளை வகுத்துள்ள இந்த விதிகள், வீடுகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைக் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் என பிரிப்பதையும் கட்டாயமாக்குகின்றன.
தூய்மையான மற்றும் பசுமையான எதிா்காலத்தை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 கொண்டு வரப்பட்டுள்ளன.
இதை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினா்களின் பங்களிப்புடன் அமல்படுத்தி, திடக்கழிவு மேலாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என மேயா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.