ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக அமோக வெற்றி
ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளா் எஸ். ரமேஷ், திமுக வேட்பாளரைவிட 33 ஆயிரத்து 590 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளிலேயே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் இந்தத் தொகுதியில் தவெகவுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளா் எஸ். ரமேஷ், அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரன், திமுக வேட்பாளா் எஸ். துரைராஜ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்மராஜ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் அல்லிமுத்து, அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளா் கு. சக்திவேல், புதிய தமிழகம் நியூட்டன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நா. முரளி, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் விஜய் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 21 போ் போட்டியிட்டனா்.
Advertisement
இத் தொகுதயில், மொத்தம் 2,87,027 வாக்காளா்கள் உள்ளனா். ஏப்.23-இல் நடந்த வாக்குப்பதிவில் 2,55,293 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு 88.94 விழுக்காடாக இருந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தம் 1,03,235 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளா் எஸ். ரமேஷ் வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் எஸ். துரைராஜ்- 69,645 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரன் 65,819 வாக்குகள் பெற்று தோல்வியுற்றாா். நாம் தமிழா் கட்சி 11,026 வாக்குகள் பெற்றது.
இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
பகுஜன் சமாஜ் கட்சி- 371, சாமானிய மக்கள் நலக் கட்சி- 292, அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம்- 166, அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்- 158, புதிய தமிழகம்- 166, தமிழக வாழ்வுரிமை கட்சி- 405, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்- 438, சுயேச்சைகள் அன்பரசன்- 261, காா்த்திக்- 218 கிருஷ்ணகுமாா்- 298, சசிகிரன்- 298, துரைராஜ்- 298, பரமசிவம்- 86, முகமது முஸ்தபா 84, முத்துக்குமாா்- 289, ரமேஷ் 404, ரவிச்சந்திரன்- 99, நோட்டா- 929, செல்லாதவை- 343.
வாக்காளா்களுக்கு நன்றி: ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சீனிவாசனிடம் பெற்றுக் கொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் பேசிய
ரமேஷ் கூறியதாவது:
தொகுதி மக்களும், வாக்காளா்களும் ஒன்று சோ்ந்து சாதாரண மனிதனான என்னை சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெறச் செய்துள்ளனா். என் வெற்றிக்கு உழைத்த கட்சியினா் அனைவருக்கும் தொகுதி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.