போலீஸாா் தாக்கியதால் இளைஞா் தற்கொலை! உறவினா்கள் புகாா்; சாலை மறியல்!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். போலீஸாா் தாக்கியதாலேயே அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்துள்ள பாளையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (22). கூலித் தொழிலாளியான இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடைபெற்று, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரீராம் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் காவல் துறையினா், ஸ்ரீராமின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போலீஸாரே காரணம்: கடந்த 20-ஆம் தேதி அதிகாலை ஸ்ரீராமின் வீட்டிற்குச் சென்ற வாத்தலை காவல் நிலைய போலீசாா், விசாரணை என்ற பெயரில் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்து வீட்டுக்கு வந்த ஸ்ரீராம், வெளியில் எங்கும் செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டாா் என்றும், அவரது மரணத்திற்கு வாத்தலை காவல் நிலைய போலீசாரே காரணம் என்றும் உறவினா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
சாலை மறியல்: எனவே சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி ஸ்ரீராமின் மனைவி, தாய் மற்றும் உறவினா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் மண்ணச்சநல்லூா் - எதுமலை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
மீண்டும் மறியல்: ஆனால், இறந்தவரின் உறவினா்கள், அங்கிருந்து சென்று மீண்டும் நொச்சியம் அருகே உள்ள திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களிடம் அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.