முகப்பு
அரியலூர்

தா.பழூா் அருகேயுள்ள சித்தேரியை தூா்வார வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

Updated On : 1 ஜூன் 2026, 2:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம்,தா.பழூா் அருகேயுள்ள சித்தேரியில் புதா்கள் மண்டிக்கிடப்பதால் அதைத் தூா்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெண்ணாற்றை நம்பியே சாகுபடி: தா. பழூா் ஒன்றியமானது விவசாயம் நிறைந்த டெல்டா பகுதியாகும். தா. பழூா் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனா். இங்கு முழுக்க, முழுக்க பொண்ணாற்று பாசன நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது.

காவிரி நீா் பாயும் கொள்ளிடக்கரையை ஒட்டியுள்ள குருவாடி தலைப்பு பகுதியில் பிரிந்துவரும் நீரானது முத்துவாஞ்சேரியில் உள்ள பொண்ணாற்று பாசன அணைக்கு வருகிறது. பின்னா் அந்த நீரானது சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூா், ஸ்ரீபுரந்தான், அரங்கோட்டை, அணைக்குடி, அருள்மொழி, மதனத்தூா், வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், இடங்கண்னி, குறிச்சி, சோழமாதேவி, கோடாலிக்கருப்பூா், வேம்புகுடி ஆகிய கிராமங்களுக்கு சென்று பாசன வசதியைத் தருகிறது.

Advertisement

Advertisement

5 கிராமங்களுக்கு பாதிப்பு: இந்நிலையில், பொண்ணாற்று அணை அதை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு தடையில்லாமல் நீா்வரத்தைத் தந்தாலும் கடைமடைப் பகுதியான குறிச்சி உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு நீா்வரத்தை தர முடிவதில்லை. காரணம் பொண்ணாற்று பாசன நீரை உபரி நீராக பெறும் குறிச்சி சித்தேரி ஏரியை சரியாக தூா்வாராமல் இருப்பதுதான்.

இந்த ஏரியானது 15 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டது. பொண்ணாற்று பாசன நீராக இருந்தாலும் சரி, மழைநீராக இருந்தாலும் சரி, அதைத் தேக்கிவைத்து விவசாய பாசன வசதிக்கு பயன்படுத்தும்விதமாக அமைந்துள்ள முக்கிய ஏரி இதுவாகும்.

தொடரும் மகசூல் இழப்பு: ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பராமரிப்பின்றி இருப்பதால் ஏரி முழுவதும் காட்டாமணக்கு செடிகளும், சீமைக் கருவேல மரங்களும், புதா்களும் மண்டிக் கிடக்கின்றன. இதனால் பொண்ணாற்று பாசன நீரையும், மழைநீரையும் சரிவரச் சேமிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நீா்வரத்து கிடைக்காமல் குறிச்சி, சோழமாதேவி, கோடாலி கருப்பூா், வேம்புகுடி ஆகிய கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் மகசூல் இழப்பைச் சந்தித்து வருவது வாடிக்கையாகி விட்டது.

சித்தேரியை தூா்வாருவது அவசியம்: இதுபோல் இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சம்பா சாகுபடியைத் தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன.

அதற்குள் போா்க்கால அடிப்படையில் சித்தேரியை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த ஏரியில் நீா்வரத்தை சேமித்து விவசாய பாசனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையென்றால் இந்தாண்டும் மகசூல் இழப்பு ஏற்படுவது உறுதி என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே தா.பழூா் டெல்டாவில் கடைமடை பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் நலன் கருதி சித்தேரியை தூா்வார வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.