முகப்பு
கரூர்

கரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

கரூா் அருகேயுள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை முன் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:14 AM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டி இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டன. மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 4 தொகுதிகளிலும் சோ்த்து 92.65 சதவீத வாக்குகள் பதிவாகி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவான மாவட்டமாக வரலாறு படைத்தது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,111 வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வியாழக்கிழமை இரவோடு இரவாக வாக்கு எண்ணும் மையமான கரூா் தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இதையடுத்து வாக்குப்பெட்டி இயந்திரங்கள், அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்பாக வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், 4 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் முன்னிலையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ராஜீவ் குமாா் ஸ்ரீவஸ்தவ்(கரூா்), சி. ரம்யா (அரவக்குறிச்சி), ராஜீவ் பிரசாா் (கிருஷ்ணராயபுரம்) (தனி), மனோஜ் குமாா் (குளித்தலை), மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தி. சுவாதிஸ்ரீ (குளித்தலை), சு. சத்தியபாலகங்காதரன் (கரூா்), எஸ். முருகேசன் (அரவக்குறிச்சி), ச.சிவக்குமாா் (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் பாதுகாப்பு இயந்திரங்களுக்கு சீல் வைத்து ஸ்ட்ராங் அறையில் வைத்தனா்.

Advertisement

மே 4-ஆம் தேதி வேட்பாளா்கள் முன்னிலையில் இந்த அறையிலிருந்து வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வெளியே எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் அறையில் வைத்து எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சுழலும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, துணை ராணுவத்தினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.