ஆதிதிராவிடா் நலத் துறையில் மோசடி: மூவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
ஆதிதிராவிடா் நலத் துறையில் மோசடியில் ஈடுபட்டு கைதான முன்னாள் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை இரவு தீா்ப்பளித்தது.
ஆதிதிராவிடா் நலத் துறையில் மோசடியில் ஈடுபட்டு கைதான முன்னாள் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை இரவு தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையில் கடந்த 2005-06-இல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக ஜவஹா் என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் ஆதிதிராவிடா் நலத் துறையில் மரப் பொருள்கள் வாங்கியதில் அரசு ஆவணங்களைத் திருத்தி அரசுக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய புகாரில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் இவரை கடந்த 2006-இல் கைது செய்தனா்.
மேலும் இவருக்கு உடந்தையாக இருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணம் அருகிலுள்ள கோவில்பட்டி தச்சு மற்றும் கொல்லு தொழிலாளா் கூட்டுறவுச் சங்க முன்னாள் துணைத் தலைவா் கணேசன், அவரது உதவியாளா் தங்கவேல் ஆகியோரையும் கைது செய்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
Advertisement
Advertisement
புதன்கிழமை இரவு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஹெச். இளவழகன் குற்றவாளிகள் ஜவஹா், கணேசன், தங்கவேல் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இவா்களில் ஜவஹா், கணேசனுக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம், தங்கவேலுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.