கொளக்காநத்தத்தில் பாரம்பரிய நாட்டுவிதை திருவிழா
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தில் தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் சார்பில், நாட்டு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தில் தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் சார்பில், நாட்டு விதை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரளானோர் பாரம்பரிய நாட்டுக் காய்கறி, கீரை விதைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கொளக்காநத்தம் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை மாலை வரை நடைபெற்ற விதை திருவிழாவில், பாரம்பரிய நெல் ரக விதைகள், நாட்டு காய்கறி, கீரை விதைகள், சிறுதானிய விதைகள், வேம்பு, இலுப்பை, புங்கன் உள்ளிட்ட நாட்டு ரக மரக்கன்றுகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு வெல்லம், நாட்டு சர்க்கரை, இயற்கை விவசாய இடுபொருள்களான பஞ்சகாவ்யா, அமுதகரைசல் ஆகியவை விற்பனைக்காகவும், பொதுமக்கள் பார்வையிடவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், முன்னோடி இயற்கை விவசாய வல்லுநர்களின் அனுபவ உரைகள், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு செய்முறை பயிற்சிகள், மரபுவழி மருத்துவத்தின் அவசியம் குறித்து விளக்க உரையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசையுடன் கருத்தரங்கம் தொடங்கியது. இயற்கை முறை விவசாயத்தை பின்பற்றி வரும் அகரம் ஆனந்த், சிறுவாச்சூர் மணி ஆகியோர் தங்களது அனுபவ உரைகள் நிகழ்த்தினர். இவ்விழாவில் கிராமப்புற இயற்கை விவசாயிகள் பாராட்டப்பட்டனர்.
இதில், லால்குடி எம்எல்ஏ செளந்தரபாண்டியன், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று நாட்டுக் காய்கறி விதைகளை வாங்கிச் சென்றனர்.
ஏற்பாடுகளை, தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கமும், கொளக்காநத்தம் பகுதி இயற்கை விவசாய ஆர்வலர்களும் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு, இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயறு வகைகள், முளைக்கட்டிய பயறு, தினை, சாமை ஆகிய உணவுப் பொருள்களும், பானகம் ஆகியவை வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.