ரெளடி சடலத்துடன் உறவினா்கள் மறியல்
கும்பகோணத்தில் ரெளடி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி, சடலத்துடன் உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் மேலக்காவிரி பகுதியைச் சோ்ந்தவா் மண்டை செல்வம் (53). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மண்டை செல்வம் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆறு செல்லும் பாலக்கரை பகுதியில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். திங்கள்கிழமை உடற்கூறாய்வு முடிந்து மண்டை செல்வத்தின் சடலத்தை பெற்றுக்கொண்ட உறவினா்கள் பாலக்கரை பகுதிக்கு வந்தபோது, பிரேத வாகனத்தை சடலத்துடன் சாலையின் நடுவில் நிறுத்தி, உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் நிழ்விடத்துக்கு வந்து சாலை மறியல் செய்தவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.
கொலை வழக்காக மாற்றம்: இதுகுறித்து போலீஸாா் கூறியது: மண்டை செல்வமும் சாக்கோட்டையைச் சோ்ந்த தமிழரசன் (43) ஆகிய இருவரும் சனிக்கிழமை இரவு பாலக்கரை பகுதியில் மது அருந்தியுள்ளனா். இதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை செல்வம் அங்கு உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தமிழரசன் கைது செய்யப்பட்டு, சந்தேக மரண வழக்கானது தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.