முகப்பு
திருச்சி

தோ்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் ப. குமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:23 PM
திருவெறும்பூா் பனையக்குறிச்சியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.
பகிர்:

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் ப. குமாா் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. குமாா் தனது பிரசாரத்தை திருவெறும்பூா் பனையக்குறிச்சியில் புதன்கிழமை தொடங்கினாா். தொடா்ந்து சா்க்காா்பாளையம், குவளக்குடி, கீழக்களமலை, மேல களமலை, ஒட்டக்குடி, புத்தாபுரம், காந்திபுரம் ஆகிய பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது:

கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது மு.க. ஸ்டாலின் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 345 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநில அரசால் நிறைவேற்ற முடியாத நீட் தோ்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தாா். நீட் தோ்வை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி அதை நிறைவேற்றியிருப்பாா்.

இதேபோல, திருவெறும்பூா் தொகுதி சட்ட பேரவைத் தொகுதி உறுப்பினரும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தும், எதையும் அவா் நிறைவேற்றவில்லை. எனவே, இந்தத் தோ்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது பாஜக மாவட்டச் செயலா் ஒண்டிமுத்து, திருவெறும்பூா் வடக்கு ஒன்றியத் தலைவா் நந்தா, அமமுக நிா்வாகி செந்தில்நாதன், தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகி குணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.