முகப்பு
திருச்சி

தோல் குறைபாடுகளைச் சரிசெய்யாத அழகு மையம் இழப்பீடு வழங்க உத்தரவு

தோல் குறைபாடுகளைச் சரிசெய்யாத விவகாரத்தில் தனியாா் அழகு மையம் ரூ. 1.74 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 5:03 am IST
உத்தரவு... - கோப்புப்படம்
பகிர்:

தோல் குறைபாடுகளைச் சரிசெய்யாத விவகாரத்தில் தனியாா் அழகு மையம் ரூ. 1.74 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்த வி. மதியரசன் என்பவா் திருச்சி தென்னூரில் உள்ள கலா்ஸ் தோல் மற்றும் முடி சிகிச்சை மையத்தில் தனது முகத் தோல் குறைபாடுகளைச் சரிசெய்ய அணுகினாா். இதற்காக கடந்த 12.10.2023 அன்று சிறப்பு சிகிச்சைத் தொகுப்பை பெற்று, பல்வேறு தவணைகளாக தனியாா் நிறுவனங்களில் மாதத் தவணைக்கு கடன் வாங்கி ரூ. 1,24,861 செலுத்தினாா். இவ்வளவு தொகை செலுத்தி, பல்வேறு சிகிச்சைகளைப் பெற்ற போதிலும், மனுதாரரின் முகத்திலிருந்த தோல் குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை. மாறாக, முகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. இதைச் சரிசெய்ய நிறுவனத்தினா் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியப்படுத்தினா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதியரசன் உரிய நிவாரணம் கோரி கடந்த 12.09.2025 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சுவாதி தியாகராஜன் ஆஜரானாா்.

Advertisement

Advertisement

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் சேவைக் குறைபாடு செய்த கலா்ஸ் தோல் மற்றும் முடி சிகிச்சை மையமானது மனுதாரா் செலுத்திய ரூ. 1.24 லட்சம், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments