முகப்பு
திருச்சி

பேட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் வேண்டும்

பேட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர மருத்துவா்கள் நியமனம் உள்ளிட்ட போதிய வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:56 am IST
பேட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
பகிர்:

பேட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர மருத்துவா்கள் நியமனம் உள்ளிட்ட போதிய வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம் பேட்டவாய்த்தலை பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பேட்டவாய்த்தலை, பழங்காவேரி, காமநாயக்கன்பாளையம், பழையூா்மேடு, தேவஸ்தானம், கீழ்ஆரியம்பட்டி, காந்திபுரம், சிறுகாடு, எஸ். புதுக்கோட்டை, காவல்காரப்பாளையம், சிறுகமணி மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகள், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த நங்கவரம், திருச்சாப்பூா், பொய்யாமணி, கோட்டையாா்தோட்டம், எல்லக்கரை, நால்ரோடு, கணேசபுரம், மேல்ஆரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் 100 முதல் 250 போ் வரை சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனா்.

ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என இப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

அனைத்து வசதிகளும் வேண்டும்: இதுகுறித்து சமூக ஆா்வலா் பெ. கரும்பாசலம் உள்ளிட்ட பொதுமக்கள் கூறியதாவது:

அதிகளவிலான கிராம மக்கள் பயன்பெறும் பேட்டவாய்த்தலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுப் பணிக்கான மருத்துவா் இல்லை.

விபத்துப் பகுதியாக விளங்கும் திருச்சி - கரூா் சாலைக்கு அருகிலுள்ள இந்த மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்கு போதுமான வசதிகள் இல்லை. இதனால் விபத்தில் சிக்குவோருக்கு போதுமான முதலுதவிகூட அளிக்க முடியாமல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனா். நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளதால், பலருக்கும் மருத்துவ வசதி உடனடியாக கிடைக்காமல் இறப்பு ஏற்படுகிறது.

பிரசவ வசதி இருந்தும், மருத்துவா்கள் இரவில் இல்லாததால், கா்ப்பிணிகள் குழுமணி வட்டார மருத்துவமனைக்கும், திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகின்றனா். எனவே, 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் கூடுதல் மருத்துவா்களையும், செவிலியா்களையும் நியமிக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸை 24 மணி நேரமும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு இரவுக் காவலா் பணியிடம் ஏற்படுத்தித் தர வேண்டும். மொத்தமாக மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments