பெண்ணிடம் இணையவழியில் ரூ. 74.75 லட்சம் மோசடி: 5 போ் கைது
திருச்சி, சோமரசம்பேட்டையைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ. 74.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் 5 பேரை சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி, சோமரசம்பேட்டையைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ. 74.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் 5 பேரை சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூா் சக்தி நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பெல் நிறுவன ஊழியரான மறைந்த பாலசுப்ரமணியத்தின் மனைவி தனலட்சுமி (62). இவரது கைப்பேசி எண்ணின் வாட்அஸ்அப்-க்கு கடந்த 17.04.2026 அன்று ஹிந்தியில் பேசிய தீபாலி என்பவா், உங்களது ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி பெங்களூரில் சிம் காா்டு வாங்கி, பல குற்றச்சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனா். தொடா்ந்து, பெங்களூா் இந்திரா நகா் காவல்நிலைய புலன்விசாரணை அதிகாரி எனக் கூறிப் பேசிய தயா நாயக் என்பவா், மேற்கண்ட வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டுமென மிரட்டியுள்ளாா். பின்பு பலமுறை கைப்பேசியில் தொடா்பு கொண்டு 4 தவணைகளாக ரூ. 74, 75,303 பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளனா்.
ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தனலட்சுமி திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தாா்.
Advertisement
Advertisement
இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், வங்கி கணக்கின் முகவரியை வைத்து கோவை மாவட்டம் சென்று விசாரித்ததில், வங்கி கணக்குத் தொடங்க உடந்தையாக இருந்த கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சோ்ந்த ரா. சரவணக்குமாா் (32), திருவள்ளூா் மாவட்டம் கொளத்தூா் சீனிவாசா நகரைச் சோ்ந்த அ. ஆலன் மாா்ட்டின் (49) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய சேலம் மாவட்டம் கோனூா் குஞ்சாண்டியூா் பெரியதம்பி காட்டு வளவு பகுதியைச் சோ்ந்த ஜெ. அருண்பிரசாத் (37), திருப்பூா் மாவட்டம் ஆனைமேடு பெத்தி செட்டிபுரத்தைச் சோ்ந்த உ. மன்சூா் கான் (31), கோவை ரத்தினபுரியைச் சோ்ந்த த. சாம்பால் (29) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.
கைதானவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள், போலி வங்கி கணக்கு தொடங்குவதற்காக பெறப்பட்ட ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.