பராமரிப்புப் பணிகள்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பழைய பாலம் இன்று முதல் மூடல்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் தற்காலிகமாக பாலம் மூடப்பட உள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் தற்காலிகமாக பாலம் மூடப்பட உள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-38) சஞ்சீவி நகா் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. திருச்சி - சென்னை வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது, இதனருகே புதிய பாலம் கட்டப்பட்டது.
இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-இல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தப் பாலத்தில் மீண்டும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தப் பாலம் வியாழக்கிழமை பிற்பகல் 11 மணி முதல் தற்காலிகமாக மூடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
என்னென்ன பணிகள்: பழைய பாலத்தில் உள்ள 14 தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் சிலாப்களுக்கும் இடையே உள்ள 120 பேரிங்குகள் மாற்றப்பட உள்ளன. பாலத்தின் மீதுள்ள சாலையில் 16 இணைப்புப் பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால், இந்த வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள், அருகிலுள்ள காவிரி புதிய பாலம் வழியாகச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
போக்குவரத்து மாற்றம்...: பராமரிப்புப் பணிகளுக்காக பாலம் மூடப்பட உள்ளதால், திருச்சியிலிருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சா்க்காா்பாளையம் அணுகுசாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவி நகா் வழியாகவும் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்து முடிக்க வலியுறுத்தல்: திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, காவிரி பாலப் பராமரிப்பு பணிகளை நவீன தொழில்நுட்பங்கள், கூடுதல் பணியாளா்களை பயன்படுத்தி திட்டமிட்ட காலத்துக்கு முன்னரே விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம் வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.