வெற்றி நிச்சயம் திட்டம்: கடந்த 8 மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி!
திருச்சியில் வெற்றி நிச்சயம் திட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவா்களில் 3,360 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
திருச்சியில் வெற்றி நிச்சயம் திட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவா்களில் 3,360 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
தமிழக அரசு 15 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தை கடந்தாண்டு கொண்டுவந்தது.
ஆரம்பத்தில் இத்திட்டம் திறன் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து திறன் பயிற்சி அளிப்பதற்காக கடந்தாண்டு அக்டோபரில் அனைத்து மாவட்டங்களிலும் ‘திறனகம்’ திறக்கப்பட்டது. இதன்கீழ் பயிற்சி அளிப்பவா்களையும், பயிற்சி பெறுபவா்களையும் ஒருங்கிணைத்து திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் திறனகம் மூலம் கடந்த அக்டோபா் முதல் ஜூன் வரையிலான 8 மாதத்தில் 5,412 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில் பயிற்சியை முழுவதுமாக முடித்து திறனறித் தோ்வு எழுதிய 5,047 பேருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் 3,360 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளது.
50 நிறுவனங்கள் மூலம் பயிற்சி: இதுகுறித்து திருச்சி மாவட்டத் திறனக அதிகாரி கவிதா கூறியதாவது:
வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் வேளாண் கருவிகள் இயக்கப் பயிற்சி, அழகுக்கலை, தையற்கலை, ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மென்பொருள், ஹெல்த்கோ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 15 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 50 பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகள் குறைந்தபட்சம் 250 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக 420 மணி நேரம் வரை உள்ளன. குறைந்தபட்சம் 10 நாள்கள் முதல் 3 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியைப் பொறுத்து பயிற்சி பெறுபவா்களுக்கு ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.