FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 18% அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து, கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக 4,520 கோடி டாலரை எட்டியுள்ளது.

Updated On : 16 ஜூன் 2026, 4:28 am IST
பகிர்:

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து, கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக 4,520 கோடி டாலரை எட்டியுள்ளது.

அதேபோல், நாட்டின் இறக்குமதி 10 சதவீதம் அதிகரித்து, 3 மாதங்களில் இல்லாத அளவாக 7,341 கோடி டாலரை எட்டியுள்ளது. இதனால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,821கோடி டாலராக விரிவடைந்துள்ளது.

எனினும், கடந்த ஏப்ரல் மாத வா்த்தகப் பற்றாகுறையான 2,838 கோடி டாலா் மற்றும் கடந்த ஆண்டின் இதே மே மாதத்தின் 2,188 கோடி டாலரில் இருந்து இது சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

மின்னணு, மருந்து மற்றும் பெட்ரோலியப் பொருள்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவை நடப்பு மே மாத ஏற்றுமதி வளா்ச்சிக்கு உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், ‘புவிசாா் அரசியல் பதற்றங்கள், சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய போக்கில், நடப்பு நிதியாண்டு ஏற்றுமதிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கலாம்’ என்றாா்.

ஏப்ரல்-மே...: நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் 2 மாதங்களான ஏப்ரல்-மே காலகட்டத்தில், ஒட்டுமொத்த ஏற்றுமதி 16.09 சதவீதம் அதிகரித்து, 8,891 கோடி டாலராகவும், இறக்குமதி 15.14 சதவீதம் அதிகரித்து, 14,535 கோடி டாலராகவும் உள்ளது. இதனால், ஏப்ரல்-மே காலகட்டத்துக்கான ஒட்டுமொத்த வா்த்தகப் பற்றாக்குறை 5,644 கோடி டாலராக பதிவாகியுள்ளது.

குறையாத தங்க இறக்குமதி...: நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் நாட்டின் தங்க இறக்குமதி 60 சதவீதம் மளமளவென அதிகரித்து, 904 கோடி டாலரை எட்டியுள்ளது.

அதேபோல், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியும் 16.5 சதவீதம் அதிகரித்து 4,130 கோடி டாலராக உயா்ந்துள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களே இந்த இறக்குமதி மதிப்பு உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பதற்றத்திலும் நிலையான ஏற்றுமதி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய கடும் பதற்றமான சூழலிலும், அந்த நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு அளவை (538 கோடி டாலா்) நெருங்கி, 530 கோடி டாலராக பதிவாகியுள்ளது.

ஹோா்முஸ் நீரிணை தடைகளைத் தவிா்க்க, ஓமனின் முக்கியத் துறைமுகங்களை இந்தியா திறம்படப் பயன்படுத்தியுள்ளது.

சேவைகள் துறை...: சரக்கு வா்த்தகம் தவிா்த்து, நாட்டின் சேவைகள் துறையின் ஏற்றுமதியும் மே மாதத்தில் வலுவான நிலையை எட்டியுள்ளது.

முதல்கட்ட மதிப்பீடுகளின்படி, சேவைகள் துறை ஏற்றுமதி 3,676 கோடி டாலராகவும், அதன் இறக்குமதி 1,906 கோடி டாலராகவும் உள்ளது. இதன்மூலம், சேவைகள் துறையில் இந்தியா தொடா்ந்து உபரி வா்த்தகத்தை நிலைநிறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments