ஏற்றம் தருகின்றன ஏற்றுமதிகள்!
இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டு விடாமல் இருப்பதற்கும், புறச்சூழலை எதிர்கொள்வதற்கும் காரணம் நமது ஏற்றுமதிகள் கைகொடுக்கின்றன என்பதுதான்.
வலுவான பொருளாதார அடிப்படையைக் கொண்ட நாடுகளே கடந்த மூன்று மாதங்களாக மேற்காசியப் போர் காரணமாக கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த வேளையிலும்கூட, இந்தியா அந்தச் சூழலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்திருக்கிறது என்பது வியக்க வைக்கும் வெற்றி.
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில பல நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தனிப்பட்ட முறையிலான நட்புறவு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சாதுர்யமான நயதந்திரம் (டிப்ளோமசி), இந்தியாவின் உறவாடு முறைமை (டிப்ளோமேடிக் ரிலேஷன்ஸ்) இவையெல்லாமே கைகொடுத்திருக்கின்றன.
ஆங்காங்கே ஒரு சில நகரங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றாலும் அவை உடனடியாக எதிர்கொள்ளப்பட்டது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது என்றாலும், எரிவாயு வழங்கும் இடைவெளி அதிகரிக்கப்பட்டது என்றாலும் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க முடிந்தது என்பதே மிகப் பெரிய சாதனை என்றுதான் கூற வேண்டும்.
Advertisement
Advertisement
மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, போதாக்குறைக்கு பருவ மழைப் பொழிவும் எல் நினோ காரணமாகக் குறைந்து காணப்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
இதற்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டு விடாமல் இருப்பதற்கும், புறச்சூழலை எதிர்கொள்வதற்கும் காரணம் நமது ஏற்றுமதிகள் கைகொடுக்கின்றன என்பதுதான். ஏற்றுமதிகள் கைகொடுப்பதற்கு நமது உற்பத்தித் துறைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான புள்ளிவிவரங்களும், ஜூன் மாதத்துக்கான ஏற்றுமதி, இறக்குமதித் தரவுகளும் வெளியாகி இருக்கின்றன.
வர்த்தகப் பற்றாக்குறை 430% அதிகரித்திருக்கிறது என்பது மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது திடுக்கிட வைக்கிறது. அதன் காரணங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது திடுக்கிடவோ, பயப்படவோ தேவையில்லை என்பது தெளிவாகிறது.
வர்த்தகப் பற்றாக்குறைக்கு முக்கியமான காரணம், நம்முடைய வர்த்தகப் பயன்பாட்டுக்கான இறக்குமதிகள் (மெர்சன்டைஸ் இம்போர்ட்ஸ்). அவற்றில் கச்சா எண்ணெய், தங்கம், உரங்கள், மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவை பெரும் பகுதி வகிக்கின்றன. தங்கம் உள்பட இவை அனைத்துமே நமது ஏற்றுமதிகளுக்குத் தேவையானவை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வால், ஜூன் மாத கச்சா எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு 40% அதிகரித்திருக்கிறது. அதேபோலத்தான், தங்கத்தின் விலையும் மேற்காசியப் போர்ச் சூழல் காரணமாக அதிகரித்திருக்கிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கடந்த மே மாதம் இரட்டிப்பாக்கப்பட்டிருப்பதுகூட ஜூன் மாதம் தங்க இறக்குமதி மதிப்பை அதிகரிக்கக் கூடும். அதேபோல, மேற்காசியப் போரால் இயற்கை எரிவாயு கொள்முதல் தடைபட்டதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் நமது உர இறக்குமதி மதிப்பு 201% அதிகரித்திருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும் புறச்சூழல் காரணமாக இறக்குமதி மதிப்பை அதிகரித்தன என்றால், உள்நாட்டுத் தேவை காரணமாக அதிகரித்த இறக்குமதியை எதிர்கொள்வது மின்னணுப் பொருள்கள் எனலாம்.
இந்தியாவின் மின்னணு சாதனங்களின் உற்பத்தித் துறை தொய்வில்லாத வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மின்னணு சாதனங்களின் உற்பத்தியானாலும், உதிரி பாகங்களை இணைத்து உருவாக்குவதானாலும் (அசெம்ப்ளிங்), அதற்கான உபகரணங்களும் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.
அரசும், இதுபோன்ற உற்பத்திக்கான மின்னணுப் பொருள்களையும், அதை உருவாக்குவதற்கான இடுபொருள்களையும் இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கிறது. கடந்த மாதம் டிஸ்ப்ளே அசெம்ப்ளிங், லித்தியம் ஐயான் செல்கள், இண்டக்ஷன் காயில் மாட்யூல்ஸ் ஆகியவற்றுக்கான உதிரி பாகங்களின் இறக்குமதிகளுக்கு சுங்க வரியைக் குறைத்திருக்கிறது.
அறிதிறன் பேசிகள், மடிக்கணினிகள், அறிதிறன் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், அதிகரிக்கவும் அதற்கான பொருள்களை இறக்குமதி செய்வதும் தவிர்க்க முடியாதது. அதன் அடுத்தகட்ட நீட்சியாக அந்த உதிரிபாகங்களும், அத்தியாவசியப் பொருள்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான முனைப்பு ஏற்பட வேண்டும்.
ஜூன் மாதத்தில் மட்டுமல்லாமல், நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டு முழுவதுமே இந்தியாவின் வர்த்தகப் பொருள்களின் ஏற்றுமதி வலுவாகவே இருந்திருக்கிறது. மொத்த வர்த்தகப் பொருள்களின் ஏற்றுமதி 15.5% அதிகரித்தது என்றால், பெட்ரோலியம் சாராத பொருள்களின் ஏற்றுமதி ஜூனில் 16.5% அதிகரித்திருக்கிறது.
அது மட்டுமல்ல, மேற்காசியாவைத் தவிர உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் இந்தியாவின் ஏற்றுமதிகள் சென்றிருக்கின்றன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவால் நமது ஏற்றுமதிகளின் மதிப்பு அதிகரித்தது (வேல்யூ) என்பதைப் புறந்தள்ள முடியாது.
ஆனால், அதைப் போலவே அளவிலும் (வால்யூம்) ஏற்றுமதிகள் அதிகரித்திருக்கின்றன. அதற்காக நாம் உற்பத்தித் துறையினருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் நமது பொருளாதாரத்தை வலுவாக நிலைநிறுத்த உதவி இருக்கிறார்கள்.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை.
பொருள்: இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே
உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன்
நிற்பவை எவை உள்ளன?
திருக்குறள் (எண் 636) அதிகாரம்: அமைச்சு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.