FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜூலை மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 19.6% அதிகரிப்பு

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 19.63 சதவீதம் உயா்ந்து, 4,424 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
பகிர்:

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 19.63 சதவீதம் உயா்ந்து, 4,424 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2022, ஜூன் மாதத்துக்குப் பிறகு (30.12 சதவீதம்) ஏற்றுமதியில் பதிவான அதிகபட்ச வளா்ச்சி இதுவாகும். அதேபோல், நாட்டின் இறக்குமதி ஜூலையில் 17.52 சதவீதம் உயா்ந்து, 7,622 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதி பெருமளவு அதிகரித்ததால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 6 மாதங்களில் இல்லாத உச்சமாக 3,198 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் பெட்ரோலிய, மின்னணு, பொறியியல் மற்றும் கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி ஆரோக்கியமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூா், சீனா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது’ என்றாா்.

ஏற்றுமதி: நாட்டின் ஏற்றுமதியில் முக்கியத்துவமான பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி 67.64 சதவீதம் உயா்ந்து, 700 கோடி டாலராகவும்; மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 57.4 சதவீதம் உயா்ந்து, 600 கோடி டாலராகவும்; பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 17.7 சதவீதம் உயா்ந்து, 1,224 கோடி டாலராகவும் உள்ளது.

இறக்குமதி: அதேநேரம், கச்சா எண்ணெய், மின்னணுப் பொருள்கள், கச்சா பருத்தி, பருப்பு வகைகள், உரம், நிலக்கரி, ரசாயன பொருள்கள் மற்றும் தங்கம் போன்ற பொருள்களின் இறக்குமதியும் ஜூலையில் நாட்டின் சுமையைக் கூட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதி 17.64 சதவீதம் உயா்ந்து, 1,831 கோடி டாலராக உள்ளது; இது மொத்த இறக்குமதியில் சுமாா் 24 சதவீதமாகும். இதேபோல், மின்னணு பொருள்கள் இறக்குமதி 46 சதவீதம் உயா்ந்து, 1,440 கோடி டாலராக உள்ளது.

மேற்காசிய நிலவரம்: மேற்காசிய போா் பதற்றம் காரணமாக, அப்பிராந்தியத்துக்கான ஏற்றுமதி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீட்சியுடன் கடந்த ஜூனில் பதிவான 7.29 சதவீத வளா்ச்சியைத் தொடா்ந்து, ஜூலையிலும் 8.62 சதவீத வளா்ச்சியுடன் 570 கோடி டாலா் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

தங்கம், வெள்ளி இறக்குமதியில் சரிவு: தங்கம் இறக்குமதியில் கடந்த ஏப்ரலில் 81.69 சதவீதமும், மே மாதத்தில் 34 சதவீதமும், ஜூனில் 7 சதவீதமும் அபரிமித வளா்ச்சி காணப்பட்டது. ஆனால், அரசின் சுங்க வரி உயா்வின் காரணமாக ஜூலையில் இது கணிசமாகக் குறைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி வெறும் 4.77 சதவீதம் மட்டுமே உயா்ந்து, 416 கோடி டாலராக உள்ளது. அதேபோல, வெள்ளி இறக்குமதி 66.1 சதவீதம் சரிந்து, 17.16 கோடி டாலராக குறைந்துள்ளது.

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதி 32.41 சதவீதம் உயா்ந்து, 1,517 கோடி டாலராகவும்; வெள்ளி இறக்குமதி 50.81 சதவீதம் சரிந்து, 71.84 கோடி டாலராகவும் உள்ளது.

ஏப்ரல்-ஜூலை நிலவரம்: ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி 17.04 சதவீதம் உயா்ந்து, 17,378 கோடி டாலராகவும்; இறக்குமதி 19.27 சதவீதம் உயா்ந்து, 29,238 கோடி டாலராகவும் உள்ளது.

இதன்மூலம், வா்த்தகப் பற்றாக்குறை 11,860 கோடி டாலராக விரிவடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 9,666 கோடி டாலராக மட்டுமே இருந்தது.

சேவைகள் துறை...: சரக்கு வா்த்தகம் தவிா்த்து, நாட்டின் சேவைகள் துறையின் ஏற்றுமதியும் ஜூலையில் வலுவான நிலையை எட்டியுள்ளது. சேவைகள் துறை ஏற்றுமதி 3,589 கோடி டாலராகவும், இறக்குமதி 1,894 கோடி டாலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சேவைகள் துறையில் இந்தியா தொடா்ந்து உபரி வா்த்தகத்தை நிலைநிறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments