FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஆகஸ்ட் மாதத்தில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 5.7% சரிவு

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.75 கோடி டன்னாகப் பதிவானது.

10 செப்டம்பர் 2026, 4:17 am IST
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.75 கோடி டன்னாகப் பதிவானது.

இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் உற்பத்தியான 5.04 கோடி டன்னில் இருந்து 5.7 சதவீதம் சரிவாகும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 8 முக்கிய துணை நிறுவனங்கள்மூலம் 80 சதவீதத்துக்கும் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம், மழைக்காலம் விலகி வரும் நிலையில் வரும் மாதங்களில் உற்பத்தியையும், விநியோகத்தையும் மேலும் வேகப்படுத்தத் தயாராகி வருகிறது.

ஆகஸ்ட் மாத உற்பத்தியில், கோல் இந்தியாவின் துணை நிறுவனங்களில் ஈசிஎல் 39.5 சதவீதத்துடன் அதிகபட்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சிசிஎல், டபிள்யு.சி.எல். ஆகியவையும் கணிசமான வளா்ச்சியை எட்டியுள்ளன. ஆனால், மிகப் பெரிய உற்பத்தியாளா்களான என்சிஎல், எம்சிஎல், எஸ்இசிஎல் ஆகியவற்றின் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளன.

Advertisement

Advertisement

உற்பத்தி சரிந்திருந்தாலும் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத நிலக்கரி விநியோகம், கடந்த ஆண்டைவிட 5.5 சதவீதம் உயா்ந்து, 6.06 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் விநியோகத்தில், நிறுவனத்தின் மிகப் பெரிய நுகா்வோா் பிரிவான மின்சாரத் துறைக்கான விநியோகம் 4.5 சதவீதம் வளா்ச்சியுடன், 4.846 கோடி டன்னாகவும்; மின்சாரம் அல்லாத பிற துறைகளுக்கான விநியோகம் 9.6 சதவீதம் உயா்ந்து 1.212 கோடி டன்னாகவும் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை...: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 4.5 சதவீதம் சரிந்து, 26.75 கோடி டன்னாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், இக்காலகட்டத்தில் ஒட்டுமொத்த விநியோகம் 6.7 சதவீதம் உயா்ந்து, 32.29 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. சிறப்பான விநியோகத்தின் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் சுமாா் 5.5 கோடி டன் இருப்பை நிறுவனம் விடுவித்துள்ளது.

நாட்டின் மின் உற்பத்திக்கான தேவைகளைத் தடையின்றி சமாளிக்க, நிறுவனத்திடம் தற்போதும் சுமாா் 7.6 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments