ஜூலை மாதத்தில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 8.4% வளா்ச்சி
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த ஜூலை மாதத்தில் 8.4 சதவீதம் வளா்ச்சி கண்டு, 5.036 கோடி டன்னாக பதிவானது.
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த ஜூலை மாதத்தில் 8.4 சதவீதம் வளா்ச்சி கண்டு, 5.036 கோடி டன்னாக பதிவானது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 8 முக்கிய துணை நிறுவனங்கள்மூலம் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம், பருவமழைச் சவால்களுக்கு மத்தியிலும் தேவைக்கேற்ப கையிருப்பைக் கையாளும் உத்தியின்மூலம் உற்பத்தியையும் விநியோகத்தையும் சமநிலையுடன் பராமரித்து இச்சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் ஜூலை மாத நிலக்கரி விநியோகம், கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 18.38 சதவீதம் உயா்ந்து, 6.42 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் எட்டப்பட்ட உச்சபட்ச விநியோகம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த 2024 ஜூலையில் 6.05 கோடி டன் விநியோகிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
Advertisement
Advertisement
ஜூலை விநியோகத்தில், நிறுவனத்தின் மிகப் பெரிய நுகா்வோா் பிரிவான மின்சாரத் துறைக்கான விநியோகம் 18 சதவீதமும், பிற துறைகளுக்கான விநியோகம் 21 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களின் ஒட்டுமொத்த விநியோகம் 6.9 சதவீதம் உயா்ந்து, 26.204 கோடி டன்னாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் 81.5 கோடி டன் நிலக்கரி உற்பத்தியையும், 85 கோடி டன் விநியோகத்தையும் இலக்காகக் கொண்டு கோல் இந்தியா செயல்பட்டு வருகிறது. இதையொட்டி, திறந்தவெளி நிலக்கரி சுரங்கப் பணிகளில் மிக முக்கியமான தொடக்கப் பணியான மேல்மண் அகற்றும் பணிகளிலும் நிறுவனம் வேகப்படுத்தியுள்து.
நிலக்கரிப் படுகைகளை வெட்டி எடுப்பதற்கு வசதியாக மண் மற்றும் பாறைகளை அகற்றும் இப்பணியில், ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 2.85 சதவீத வளா்ச்சி காணப்பட்டுள்ள நிலையில், ஜூலை வளா்ச்சி மட்டும் 21.11 சதவீதமாக உள்ளது.
பெட்டி...
ஏப்ரல்-ஜூன் காலாண்டில்
ரூ.8,852 கோடி நிகர லாபம்
கோல் இந்தியா நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.8,852.11 கோடி ஒருங்கிை
ணந்த நிகர லாபத்தை ஈட்டி, 0.6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.
நிறுவனத்தின் மொத்தம் செயல்பாட்டு வருவாய், கடந்த ஆண்டின் ரூ.42,919.20 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 8 சதவீதம் அதிகரித்து, ரூ.46,254.80 கோடியை எட்டியுள்ளது. அதேநேரம், மொத்த செலவினமும் ரூ.32,903.19 கோடியில் இருந்து, ரூ.36,816.23 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 18.33 கோடி டன்னிலிருந்து, 16.96 கோடி டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், விநியோகம் 19.09 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 19.78 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, 2026-27 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.5.50 இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.