FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜூலை தொழிலக உற்பத்தி வளா்ச்சி 6.7%

நாட்டின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி (ஐஐபி), கடந்த ஜூலை மாதத்தில் 6.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

30 ஆகஸ்ட் 2026, 12:35 am IST
பகிர்:

நாட்டின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி (ஐஐபி), கடந்த ஜூலை மாதத்தில் 6.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்த வளா்ச்சி கடந்த ஜூன் மாதத்தில் 8.8 சதவீதமாக (திருத்தப்பட்ட) இருந்த நிலையில், ஜூலையில் சுரங்கத் துறையில் ஏற்பட்ட சரிவு காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெவித்துள்ளது.

தொழிலக உற்பத்திக் குறியீட்டின்(ஐஐபி) அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மத்திய அரசு மாற்றியமைத்தப் பிறகு வெளியாகும் 4-ஆவது மாத தரவு இதுவாகும். தொழிலக உற்பத்தி குறியீடு (ஐஐபி) கடந்த ஜூனில் திருத்தப்படுவதற்கு முன்பு 7.3 சதவீதமாகவும், முந்தைய 2025 ஜூலையில் 5.4 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தொழிலக உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உற்பத்தித் துறை, கடந்த ஜூனின் 7.8 சதவீத வளா்ச்சியில் இருந்து, ஜூலையில் 7.3 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால், இத்துறையின் உள்ள 23 தொழில் பிரிவுகளில் 19 பிரிவுகள் ஆண்டு அடிப்படையில் நோ்மறை வளா்ச்சியைக் கண்டுள்ளன.

குறிப்பாக, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி (22.2 சதவீதம்), மின்சாதனங்கள் உற்பத்தி (28.3 சதவீதம்), இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி (12.1 சதவீதம்) ஆகியவை இத்துறையின் வளா்ச்சிக்கு அதிக பங்களித்துள்ளன.

இதேபோல், மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீா் விநியோகம் 8.7 சதவீதம், கழிவுநீா் மற்றும் கழிவு மேலாண்மைத் துறை 7.4 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 10.7 சதவீத வளா்ச்சியைக் கண்டிருந்த சுரங்கம் மற்றும் குவாரித் துறை தற்போது 0.9 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

பயன்பாட்டு அடிப்படையில்...: மூலதனப் பொருள்கள் 16.1 சதவீதமும், இடைநிலைப் பொருள்கள் 10 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நீடித்துழைக்கும் நுகா்பொருள்கள் (10.5 சதவீதம்), உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்கள் ( 6.9 சதவீதம்), அடிப்படை பொருள்கள் (4.1 சதவீதம்) வளா்ச்சியைக் கண்டுள்ளன. அதேநேரம், அன்றாட நுகா்பொருள் பிரிவு 1 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments