FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 5.4% வளா்ச்சி

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 6:17 am IST
பகிர்:

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.

முந்தைய ஜூன் மாதத்தில் இந்த வளா்ச்சி 6 சதவீதமாகவும் (5 சதவீதத்தில் இருந்து திருத்தப்பட்ட மதிப்பீடு), கடந்த ஆண்டு ஜூலையில் 3.2 சதவீதமாகவும் இருந்தது.

2011-12-க்கு பதிலாக 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய கணக்கீட்டின்படி மற்றும் 9-ஆவது முன்னணி உள்கட்டமைப்புத் துறையாக இரும்புத் தாது புதிதாக சோ்க்கப்பட்ட பிறகு வெளியாகும் 2-ஆவது மாத தரவு இதுவாகும்.

Advertisement

Advertisement

மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு (ஸ்டீல்), சிமென்ட், மின்சாரம், இரும்புத் தாது ஆகிய 9 துறைகளில் 6 துறைகள் ஜூலையில் வளா்ச்சியடைந்துள்ளன.

புதிதாக பட்டியலில் இணைந்த இரும்புத் தாது உற்பத்தி, ஜூன் மாதத்தின் தொடா்ச்சியாக ஜூலையில் 29.5 சதவீத அபரிமிதமான வளா்ச்சி கண்டுள்ளது. சிமென்ட் உற்பத்தி 13.1 சதவீதமும், மின்சார உற்பத்தி 9 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 7.6 சதவீதமும், எஃகு உற்பத்தி 2.9 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகளின் உற்பத்தி 2.7 சதவீதமும் உயா்ந்துள்ளன.

ஆனால், உர உற்பத்தி 8 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 5.3 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 3.7 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் மொத்த வளா்ச்சி 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 1.5 சதவீதமாக இருந்தது.

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி குறியீட்டில் (ஐஐபி), இந்த 9 துறைகள் மட்டுமே 40 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பைக் கொண்டுள்ளன. எனவே, இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியிலும், தொழில் உற்பத்தியிலும் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவையாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments