FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உக்ரைன் தாக்குதலால் சுத்திகரிப்பு பாதிப்பு: ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா!

ரஷியாவுக்கு அதிகம் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

31 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
பகிர்:

ரஷியாவுக்கு அதிகம் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

உக்ரைனின் தொடா் தாக்குதலால் ரஷியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது.

இதுகுறித்து கச்சா எண்ணெய்க் கப்பல்களைக் கண்காணிக்கும் அமைப்பான வோா்டெக்சாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போா் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த நாட்டில் உள்ள கச்சா சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ட்ரோன் மூலம் உக்ரைன் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இதனால் ரஷியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, வெளிநாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை ஏற்றுமதி செய்ய 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ரஷியா தடை விதித்துள்ளது.

அதேநேரத்தில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், நட்பு நாடான இந்தியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை ரஷியா அதிகம் இறக்குமதி செய்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரஷியாவுக்கு நாளொன்றுக்கு இந்தியா 1,25,000 பீப்பாய் பெட்ரோலை ஏற்றுமதி செய்துள்ளது. இதை மொத்தமாக கணக்கிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா, ரஷியாவுக்கு 4,70,000 டன் பெட்ரோலை ஏற்றுமதி செய்துள்ளது.

இதுபோல கடந்த 2 மாதங்களில் ரஷியாவுக்கு இந்தியா 20 லட்சம் பீப்பாய்களுக்கும் கூடுதலாக பெட்ரோலை ஏற்றுமதி செய்துள்ளது. ‘நயாரா எனா்ஜி’ நிறுவனத்தால் குஜராத்தில் நடத்தப்படும் வடினாா் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து இந்த பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நயாரா நிறுவனத்தின் பாதி பங்குகள், ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா இடையே நடைபெறும் போரால் ஹோா்முஸ் நீரிணை வழியே வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

ஜூன், ஜூலை மாதங்களில் ரஷியாவிடம் இருந்து 26 லட்சம் பீப்பாய்களுக்கும் கூடுதலாக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. அதாவது, இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் மொத்த கச்சா எண்ணெய்யில் பாதியை ரஷியாவிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்தது.

அவ்வாறு ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை பெட்ரோலாக சுத்திகரிப்பு செய்து ரஷியாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்வதைப்போல துருக்கி, மொராக்கோ ஆகிய நாடுகளிடம் இருந்தும் ரஷியா பெட்ரோலை இறக்குமதி செய்கிறது என்று அந்தப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments