FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்காசிய போரால் விநியோக பாதிப்பு: அமெரிக்காவிடமிருந்து எல்பிஜி இறக்குமதியை அதிகரித்த இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியை இந்தியா கணிசமாக உயா்த்தியது குறித்து...

25 ஆகஸ்ட் 2026, 10:41 pm IST
எல்பிஜி இறக்குமதி அதிகரிப்பு - பிரதிப் படம்
பகிர்:

மேற்காசிய போரால் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிடம் இருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதியை இந்தியா கணிசமாக உயா்த்தியுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையேயான தாக்குதல்கள் தொடா்வதால் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியாக சரக்குக் கப்பல்கள் பயணிப்பதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் எரிவாயு இறக்குமதி தொடா்பாக கெப்லா் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமெரிக்காவிடம் இருந்து கடந்த ஜூலை மாதம் 8.9 லட்சம் டன், ஆகஸ்ட் மாதம் 6.2 லட்சம் டன் எல்பிஜியை இந்தியா இறக்குமதி செய்தது.

Advertisement

Advertisement

இந்த இரு மாதங்களிலும் இந்தியாவுக்கு சவூதி அரேபியா எல்பிஜி விநியோகிக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து 1.40 லட்சம் டன், கத்தாரிடமிருந்து 60,000 டன் எல்பிஜி இறக்குமதியை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து 8.91 லட்சம் டன் எல்பிஜியை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், இதற்கு நிகரான அளவில் நிகழாண்டு ஜூலை மாதம் அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

எல்என்ஜி இறக்குமதியும் அதிகரிப்பு: இந்தியாவுக்கு சராசரியாக ஒவ்வொரு மாதமும் 12 லட்சம் டன் எல்என்ஜி விநியோகிக்கும் கத்தாரிடமிருந்து நிகழாண்டு ஏப்ரல் மாதம் இறக்குமதி செய்யப்படவில்லை.

மாறாக அமெரிக்காவிடமிருந்து நிகழாண்டு ஜூலையில் 7.5 லட்சம் டன் மற்றும் ஆகஸ்டில் 7.2 லட்சம் டன் எல்என்ஜி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் - ரஷியா முதலிடம்: மேற்காசிய போரால் வளைகுடா நாடுகளைவிட அமெரிக்காவிடமிருந்து எல்பிஜி மற்றும் எல்என்ஜி இறக்குமதியை அதிகரிந்திருந்தாலும் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகளில் ரஷியாவே முதலிடத்தில் தொடா்கிறது.

ரஷியாவிடமிருந்து ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து 6.1 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments