மேற்காசியாவில் போா்ப் பதற்றம் எதிரொலி: வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா
மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றம், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவற்றால் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா பலமடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றம், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவற்றால் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா பலமடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய், எரிவாயுவை வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தாா் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியே இறக்குமதி செய்து வந்தது.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெறும் போரால் ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு, வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை இந்தியா அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெனிசுலா நாட்டிலிருந்து நாளொன்றுக்கு 4.44 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4-ஆவது இடத்தை வெனிசுலா பிடித்துள்ளது. இது அமெரிக்கா (நாளொன்றுக்கு 1.53 லட்சம் பீப்பாய்), இராக் (நாளொன்றுக்கு 1.18 லட்சம் பீப்பாய்) நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும். இதேபோல், பிரேஸில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷியா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாடு இந்தியாவுக்கு ஜூன் - ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய்களும், ஆகஸ்ட் மாதத்தில் 20 லட்சம் பீப்பாய்களும் ஏற்றுமதி செய்துள்ளது. இது உலக நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் அளவில் 50 சதவீதம் ஆகும்.
ஆனால், மேற்காசிய நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் அளவு ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் 30 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 43 சதவீதமாக இருந்தது. வெனிசுலா, பிரேஸில் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் 3.5 சதவீதமாக இருந்தது. அது இந்தாண்டு 12.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்கையில் ஆகும் செலவு, காலநேரம் ஆகியவை குறைவாகும். ஆனால் வெனிசுலா, அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது இறக்குமதிச் செலவு மற்றும் கால நேரம் பல மடங்கு அதிகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.