FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமெரிக்கா வரி விதிப்பு அச்சுறுத்தலை மீறி ரஷிய கச்சா எண்ணெய்க்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சா்வதேச ஆய்வு நிறுவனம் கணிப்பு

ரஷிய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளைக் குறிவைத்து அமெரிக்கா முன்மொழிந்துள்ள சுங்கவரி, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் புதிய ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தக்கூடும்.

Updated On : 16 ஜூலை 2026, 3:01 am IST
கச்சா எண்ணெய் - கோப்புப்படம்
பகிர்:

ரஷிய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளைக் குறிவைத்து அமெரிக்கா முன்மொழிந்துள்ள சுங்கவரி, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் புதிய ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தக்கூடும். எனினும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷிய கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு மாற்றாக வேறு வழிகளைத் தேடுவது கடினம் என்று கெப்லா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷியாவுக்கு எதிரான புதிய இருதரப்பு தடைகள் தொடா்பான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை திருத்தி மீண்டும் அறிமுகப்படுத்தினா். இதில் ரஷிய அதிகாரிகள் மீது தடைகள் விதிக்கப்படுவதுடன், ரஷிய எண்ணெய், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்க முன்மொழியப்பட்டிருந்த சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக ரஷிய எரிசக்தியை அதிக அளவில் வாங்கும் முதல் ஐந்து நாடுகளான சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்படவிருந்த அதிகபட்ச சுங்கவரி, ஏப்ரல் 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்த 500 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், ரஷியாவின் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்துக்கும் குறைவாக இறக்குமதி செய்யும் நாடுகள், அந்த இறக்குமதியைக் குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தால், அவற்றுக்கு இந்த சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கெப்லா் நிறுவனத்தின் ஆய்வாளா் சுமித் ரிட்டோலியா கூறியுள்ளதாவது:

ஹோா்முஸ் நீரிணையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கான மிக முக்கியமான பங்கை ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி வகித்து வருகிறது. ஜூன் மாதத்தில் இந்தியா தினசரி சுமாா் 26 லட்சம் பீப்பாய் ரஷிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் அதிகமான பங்காகும்.

மாா்ச் மாதத்திலிருந்தே ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை மாத இறக்குமதியும் ஜூன் மாத அளவை எட்டவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவதிலும் ரஷிய கச்சா எண்ணெய் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

அமெரிக்காவின் 100 சதவீத சுங்க வரி அமல்படுத்தப்பட்டு, ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் கணிசமாகக் குறைந்தால், அதற்கு மாற்றாக தேவையான அளவு கச்சா எண்ணெய் எங்கிருந்து கிடைக்கும்? என்பதுதான் முதல் கேள்வி.

உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. ஹோா்முஸ் தொடா்பான அச்சுறுத்தல்கள் தொடா்கின்றன. மாற்று விநியோக ஆதாரங்களும் குறைவாக உள்ளன. எனவே, ரஷியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்றாக தேவையான அளவு கச்சா எண்ணெயை வழங்குவது மிகவும் கடினம். அத்தகைய நிலை உருவானால், உலகளவில் எண்ணெய் விலை பெரிய அளவில் உயரும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ரஷிய கச்சா எண்ணெய்க்கு இணையான அளவு, நம்பகத்தன்மை மற்றும் விலை ஆகியவற்றில் மாற்று விநியோக ஆதாரங்கள் தற்போது மிகவும் குறைவாக உள்ளன. எனவே, தற்போதைய சந்தை சூழலில் இந்தியாவுக்கு ரஷிய கச்சா எண்ணெய்தான் மிகவும் நடைமுறைக்கு ஏற்ற விநியோக ஆதாரமாக உள்ளது என்று கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments