ஜூனில் ரஷியாவிடமிருந்து ரூ. 59,900 கோடிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி! இதுவரை இல்லாத புதிய உச்சம்!!
ரஷியாவிடம் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக, ஜூன் மாதத்தில் இந்தியா ரூ.59,900 கோடிக்கும் மேல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக, ஜூன் மாதத்தில் இந்தியா ரூ.59,900 கோடிக்கும் மேல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
இதுகுறித்து எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பான ஆய்வு மையம் (சிஆா்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரஷியாவிடம் இருந்து மிக அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அந்நாடு ரூ.79,500 கோடிக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இதற்கு அடுத்து 2-ஆவது அதிகபட்சமாக ரஷியாவிடம் இருந்து ரூ.59,900 கோடிக்கு இந்தியா கச்சா எண்ணெய், நிலக்கரி, எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீதம் அதிகம். அதேபோல் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம்.
Advertisement
Advertisement
இந்தியா தனது இறக்குமதியை அதிகரித்ததன் மூலம், ரஷியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், மலிவு விலையில் விற்பதால், கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 8 சதவீதம் ரஷியாவுக்கு மாதந்தோறும் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளுக்கு ரஷியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்த போதிலும், கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு சதவீதம் குறைந்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், நயாரா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் தங்களது சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அந்த நாடுகளில் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். இதுபோல ரூ.4,019 கோடிக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இதேபோல் ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யை துருக்கி, புரூணே, ஜாா்ஜியா ஆகிய நாடுகளும் சுத்திகரித்து, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன என்று சிஆா்இஏ தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.