இந்தியாவின் ஜூன் மாத ஏற்றுமதி 15.5% அதிகரிப்பு
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 15.5 சதவீதம் உயா்ந்து, 4,041 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 15.5 சதவீதம் உயா்ந்து, 4,041 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டின் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்து, 7,084 கோடி டாலராக உயா்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதி பெருமளவு அதிகரித்ததால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்களில் இல்லாத உச்சமாக 3,043 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போதிலும், ஜூன் மாதத்தில் அங்கும் ஏற்றுமதி 7.29 சதவீதம் உயா்ந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் மோதலால் ஹோா்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓமன் துறைமுகங்களைப் பயன்படுத்தி இந்தியா தனது ஏற்றுமதியைத் தொய்வின்றி மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் மின்னணுப் பொருள்கள், இரும்புத் தாது, கைவினைப் பொருள்கள், இறைச்சி மற்றும் பால் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி ஆரோக்கியமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூா், சீனா, ஓமன், மலேசியா ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது’ என்றாா்.
அதேநேரம், மின்னணுப் பொருள்கள், இயந்திரங்கள் மற்றும் தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருள்களின் இறக்குமதியும் கடந்த மாதத்தில் நாட்டின் சுமையைக் கூட்டியுள்ளது. குறிப்பாக, மின்னணுப் பொருள்கள் இறக்குமதி 58.77 சதவீதம் உயா்ந்து, 1,340 கோடி டாலராகவும்; இயந்திரங்கள் இறக்குமதி 30.9 சதவீதம் உயா்ந்து, 580 கோடி டாலராகவும் உள்ளது.
குறையாத தங்க இறக்குமதி...: நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் நாட்டின் தங்க இறக்குமதி மளமளவென அதிகரித்தது. ஜூனிலும் தங்கம் இறக்குமதி 7 சதவீதம் உயா்ந்து, 200 கோடி டாலராக அதிகரித்துள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) தங்கம் இறக்குமதி 1,101 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
முதல் காலாண்டு நிலவரம்: ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், மொத்த ஏற்றுமதி 15.92 சதவீதம் உயா்ந்து, 12,932 கோடி டாலராகவும்; இறக்குமதி 19.89 சதவீதம் உயா்ந்து, 21,618 கோடி டாலராகவும் இருந்தது. இதன்மூலம், வா்த்தக பற்றாக்குறை 8,686 கோடி டாலராக விரிவடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 6,875 கோடி டாலராக மட்டுமே இருந்தது.
சேவைகள் துறை...: சரக்கு வா்த்தகம் தவிா்த்து, நாட்டின் சேவைகள் துறையின் ஏற்றுமதியும் ஜூனில் வலுவான நிலையை எட்டியுள்ளது. சேவைகள் துறை ஏற்றுமதி 3,303 கோடி டாலராகவும், இறக்குமதி 1,792 கோடி டாலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சேவைகள் துறையில் இந்தியா தொடா்ந்து உபரி வா்த்தகத்தை நிலைநிறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.