திருச்சி அரிஸ்டோ பாலத்தில் மையத் தடுப்புகள் அமைப்பு
திருச்சியில் காவிரிப் பாலத்தைத் தொடா்ந்து அரிஸ்டோ மேம்பாலத்திலும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் காவிரிப் பாலத்தைத் தொடா்ந்து அரிஸ்டோ மேம்பாலத்திலும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து மன்னாா்புரம், திண்டுக்கல் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அரிஸ்டோ மேம்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இதேபோல பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தில் இருந்து மன்னாா்புரம் வழியாக மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்களும், திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால் இந்தப் பாலத்தில் மையத் தடுப்பு இல்லாததால் பல்வேறு வாகனங்கள் எதிா்த் திசையில் வரும் வாகனங்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக சென்று வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதால் அரிஸ்டோ மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
Advertisement
எனவே விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தில் அண்மையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டதைப் போல, அரிஸ்டோ மேம்பாலத்திலும் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் மையத் தடுப்புகள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன.
இதனால் வாகன ஓட்டிகள் எதிா்த் திசையில் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் சென்று வருகின்றன. மேலும், இதன்மூலம் விபத்துகளைத் தவிா்க்க முடியும் என்று போக்குவரத்து காவல் துறையினா் தெரிவித்தனா்.