முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம் செய்யும் கலைஞர்!

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

Updated On : 21 ஜூன் 2026, 4:00 am IST
பகிர்:

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், கடந்த நூற்றாண்டில் நமது முன்னோர் பயன்படுத்திய ஆடைகள் முதல் அவர்கள் தொழில் ரீதியாகப் பயன்படுத்திய பொருள்கள், வாகனங்கள் என ஏராளமானவை தற்போது அடையாளம் இழந்தும், மறக்கப்பட்டும் வருகின்றன. அத்தகைய மறக்கப்பட்ட வரலாற்றை தற்காலத் தலைமுறையினரும், எதிர்கால மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன.

சென்னை மாநகராட்சி ஆவணக் காப்பகத்தின் அடிப்படையில் கி.மு.15 - ஆம் நூற்றாண்டிலிருந்து சென்னை தனது வளர்ச்சியைத் தொடங்கி இன்று வானுயர்ந்த கட்டடங்கள், அவற்றின் மேலே பறக்கும் வானூர்திகள், அலைகளுடன் விளையாடும் கடல், தரையிலும், தரைக்கடியிலும் செல்லும் விரைவு ரயில்கள் என விதவிதமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

ஜி.சீனிவாசன்

இந்நிலையில், சென்னையின் வளர்ச்சியில் அடையாளப்படுத்தப்பட்ட பேருந்துகள், ரயில்கள், படகுகள், வானூர்திகள், காவலர் அடையாளங்கள், ஆன்மிக கலாசாரம் எனப் பலவற்றையும் மினியேச்சர் வடிவில் உருவாக்கியுள்ளார், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை புகைப்படக் கலைஞரான ஜி.சீனிவாசன் (64). மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பொருள்களை தனது வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளார். கலாசார, பண்பாட்டு, பயன்பாட்டு அடையாளங்களை மீட்டுருவாக்கும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரிடம் பேசினோம்.

Advertisement

Advertisement

'எனது சொந்த ஊர் நாகர்கோவில். எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். முதலில் அறிவியல் கண்காட்சிக்காக பயிற்சி விமானத்தை மரக்கட்டையில் வடிவமைத்தேன். அப்போதிலிருந்து புகைப்படம் எடுப்பதிலும், நிஜப் பொருள்களை மாதிரிகளாக வடிவமைப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது.

1991- ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்து, உளவுத்துறைக்கான புகைப்படப் பிரிவில் கடந்த 2022- ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பணியாற்றிய காலத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த அப்துல்கலாம், ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கையாநாயுடு, அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனின் இந்திய பயணம் ஆகியவற்றில் பணியாற்றியதுடன், அவர்களைப் புகைப்படம் எடுத்து பாராட்டையும் பெற்றுள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர் எனது புகைப்படத் திறமையை பாராட்டியதுடன், தேசிய அளவிலான புகைப்பட போட்டிக்கும் அனுப்பிவைத்தார். அதில் மூன்றாம் பரிசைப் பெற்றுவந்தேன்.

அரிய புகைப்படங்கள்

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தின் அமைப்பில் முக்கியப் பங்கெடுப்பாளராக இருந்து பணிபுரிந்ததுடன், அதிலுள்ள 50- க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களும் நான் எடுத்தவை என்பது பெருமைக்குரியது. சென்னை காவல்துறையின் மிகப்பழைய சீருடைகள் வகை, தற்கால சீருடை வகை என புகைப்படத் தொகுப்புகளை அருங்காட்சியகத்துக்கு அளித்துள்ளேன். பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையின் மறந்து போன அடையாளங்களை மாதிரிகளாக வடிவமைத்து தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

அதில் மதுரை பாண்டியன் விரைவு ரயில் நிலக்கரி உதவியுடன், நீராவி என்ஜினாக ஓடியதை நினைவூட்டும் வகையில் 8 அடி நீளத்திலும், 10 இன்ச் உயரத்திலும் இரு பெட்டிகள், நிலக்கரி பெட்டி ஆகியவற்றுடன் அதை வடிவமைத்துள்ளேன். அதற்கான தண்டவாளமும் அமைக்கப்பட்டுள்ளது. 1950-ஆம் ஆண்டு சென்னையில் டாடா நிறுவன பேருந்தும், அதையடுத்து 1970-ஆம் ஆண்டு லேலண்ட் பேருந்தும் இயக்கப்பட்டது. அதை நினைவூட்டும் வகையில் டிரெய்லர் இரண்டடுக்கு பேருந்து மாதிரியை வடிவமைத்துள்ளேன்.

பழைமையான ரோந்து வாகனம்

சென்னை வரலாற்றில் காவல்துறைக்கு முக்கியப் பங்குண்டு. அதனால் 1929- ஆம் ஆண்டு சென்னையின் ஆங்கிலேய காவல் துறையினரை சீருடையுடனும், அவர்கள் சென்ற ரோந்து வாகனம், போக்குவரத்து போலீஸாருடன் நிழற்குடை என வடிவமைத்துள்ளேன். 1959-ஆம் ஆண்டு நமது காவல்துறை ரோந்து வாகனம் எப்படிச் செயல்பட்டது என்பதையும், பொதுமக்கள் அவசரத் தேவைக்கு 1909 என்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தியதையும் நினைவூட்டும் வகையில் மாதிரி வடிவமைப்பு செய்துள்ளேன்.

60 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை மக்களிடையே பிரசாரமாகக் கொண்டு செல்ல, அப்படம் குறித்த துண்டு பிரசுரங்களை சிறிய ரக விமானத்திலிருந்து தரையில் வீசுவதை மிகப்பெரிய கெளரவமான யுக்தியாக நினைத்தனர். அதனால் அப்போது திரைப்பட பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தையும் வடிவமைத்துள்ளேன்.

நிலக்கரி நீராவி என்ஜின் ரயில்

கடந்த காலங்களில் சென்னை மிகச்சிறிய ஊராகும். அதைச் சுற்றிலும் விவசாய நிலங்களே இருந்துள்ளன. அதை நினைவூட்டும் வகையில் ஏர்க்கலப்பையை உருவாக்கியுள்ளேன். கடலை நினைவூட்டும் வகையில் பழைய படகையும் வடிவமைத்துள்ளேன். எனது இந்தப் படைப்புகள் அனைத்துமே தேக்கு, அலுமினியம், பிவிசி குழாய் ஆகியவற்றாலே வடிவமைக்கப்படுகிறது. ஒரு சிறிய மாதிரியை அமைக்க 10 நாள்கள் முதல் 2 ஆண்டுகள் வரை உழைக்கவேண்டியுள்ளது. ஏர்க்கலப்பையை 10 நாள்கள் வடிவமைத்தேன். பாண்டியன் நிலக்கரி நீராவி என்ஜின் ரயிலை 2 ஆண்டுகளாக வடிவமைத்து முடித்துள்ளேன்.

சென்னையின் காவல்துறை வரலாற்றை விளக்கும் வகையில் ஆங்கிலத்தில் 'காவல்' எனும் நூல் உருவாக்கத்தில் எனது பங்களிப்பு முழுமையாக இருந்தது. காவல்துறையின் 150- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. அதன் புகைப்படத்தை தேர்வு செய்த பெருமை எனக்குரியது.

மினியேச்சர் வகையிலான மீள் உருவாக்கத்தை மாணவர்கள் உள்ளிட்டோருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளேன். ஆனால், அதை வெகு ஜன பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டியது அந்தந்தத் துறையினரின் கடமையாகும். ஆகவே, ரயில்வே துறை, காவல்துறை, சென்னை மாநகராட்சியினர் எனது பாரம்பரிய சென்னையின் மறந்து போன அடையாளங்களின் மீட்டுருவாக்கத்தை மக்களிடையே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்தால் நல்லது என்பதை வேண்டுகோளாக வைக்கவிரும்புகிறேன்' என்கிறார் சீனிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments