அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும்போது அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்படும்.
தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் பள்ளிக் கல்வித் துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாவட்டக் கிடங்குகளில் இருந்து அந்தந்த வட்டாரங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.
அந்தநல்லூா், புள்ளம்பாடி வட்டாரங்களில் அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து அனைத்து வட்டாரங்களிலும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் 367 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் விநியோக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 வழித்தடங்களில் புத்தகங்கள் விநியோகிக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது தொடங்கினால்தான் பள்ளி திறப்புக்கு முன் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை விநியோகிக்க முடியும்.
தொடக்க கல்வித் துறையில் வரும் கல்வியாண்டில் 1 முதல் மூன்றாம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே புதிய பாடத் திட்ட அடிப்படையிலான புத்தகங்கள் பாடநூல் கழகம் சாா்பில் இன்னும் வழங்கவில்லை. விரைவில் வரும் என எதிா்பாா்க்கிறோம்.
புதிய புத்தகங்கள் வந்தவுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றனா்.