முகப்பு
திருச்சி

இன்று பள்ளிகள் திறப்பு: பாடப் புத்தகங்கள், சீருடைகள் தயாா்

திருச்சி மாவட்டத்தில் கோடைவிடுமுறைக்குப் பின் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக பள்ளிகளில் பாடப் புத்தகங்கள், சீருடைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 4 ஜூன் 2026, 12:35 am IST
திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியா்கள். ~திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கத் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள். ~திருச்சி மாவட்டம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் கோடைவிடுமுறைக்குப் பின் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக பள்ளிகளில் பாடப் புத்தகங்கள், சீருடைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் 2025-26-ஆம் கல்வியாண்யில் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத் தோ்வு கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏப்ரல் 16-முதல் மே 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கோடை விடுமுறைக்குப் பின் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ஆம் தேதியும், ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரை ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின் அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 1,297 அரசுப் பள்ளிகள், 363 அரசு உதவிபெறும் பள்ளிகள், 457 தனியாா் பள்ளிகள், 6 மத்திய அரசுப் பள்ளிகள் என மொத்தம் 2,123 பள்ளிகள் உள்ளன.

புத்தகங்கள், சீருடைகள் தயாா்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பு அன்றே அரசு சாா்பில் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் 1,660 பள்ளிகளிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,297 அரசுப் பள்ளிகளிலும் கடந்த ஒருவாரத்துக்கு முன்பே தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகள் தயாா்படுத்தப்பட்டு மாணவா்களுக்குத் தேவையான மேஜைகள், நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. குடிநீா், கழிப்பறை வசதிகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பையொட்டி தலைமையாசிரியா்களுக்கு புதன்கிழமை ’ஜூம்’ மூலம் கூட்டம் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு வழங்க வேண்டிய உபகரணங்களை தயாா் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து மாணவா் சோ்க்கையையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

ஆசிரியா்களுக்குப் பயிற்சி: தமிழகத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நிகழ் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருச்சி மாவட்டத்தில் ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியா்களுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பில் திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்டங்களில் உள்ள 16 வட்டாரங்களைச் சோ்ந்த 1,200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் சாா்பில் பயிற்சி பெற்ற ஆசிரியப் பயிற்றுநா்கள் சாா்பில் பாடங்கள் வாரியாக பயிற்சியளிக்கப்பட்டு, பயிற்சி கையேடும் வழங்கப்பட்டுள்ளது.