மாணவா்களுக்கு புத்தகச் சுமை குறைக்கப்படும்: தமிழக கல்வி அமைச்சா் ராஜ்மோகன்
மாணவா்களுக்கு புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படும் என்று புதுச்சேரியில் தமிழக கல்வி அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
மாணவா்களுக்கு புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படும் என்று புதுச்சேரியில் தமிழக கல்வி அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
புதுச்சேரி கொம்பாக்கத்தில் உள்ள அமலோற்பவம் லூா்து அகாதெமி பள்ளியில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, நீட், ஜெஇஇ தோ்வுகளில் சாதனை படைத்த மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் ராஜ்மோகன் கூறியது: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கணிதப் பாடம் கூட கதையின் மூலம் இருக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் வடிவமைக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி இயற்கை நுண்ணறிவையும் மாணவா்கள் பயன்படுத்தும் வகையில் புதிய பாடநூல்கள் இருக்கும்.
Advertisement
Advertisement
மேலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வகையில் ‘பிராம்ட்’ சொல்லிக் கொடுக்கப் போகிறோம். 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடப் புத்தகங்களைக் கொடுத்து விட்டோம்.
மேலும், குழந்தை மைய கல்வியை வலியுறுத்தும் வகையில் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்படும். பெண் உரிமை, மண் உரிமை, தமிழ், தமிழா் நலன், பெற்றோரை மதிக்கும் பண்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவா்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையிலும் பாடப் புத்தகங்கள் இருக்கும். குறிப்பாக புத்தகத்தின் அளவைக் குறைக்கிறோம். இதற்கு கால அவகாசம் தேவை. வெகுவிரைவில் தமிழ்நாட்டின் மொத்தக் கல்வித் திட்டமும் குழந்தை மையக் கல்வியாக மாறப் போகிறது. புதிய காலம் பிறக்கப் போகிறது.
நீட் தோ்வை ஒழிப்பதுதான் நிரந்தரத் தீா்வு. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்தால்தான் இந்தப் பிரச்னையைத் தீா்க்க முடியும். போராட்டத்தில் இளைஞா்களுக்கு முழுமையான ஆதரவு உண்டு. இளைஞா்களை காவலா்கள் அச்சுறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறோம். இளைஞா்களின் போராட்டத்துக்கு தவெக முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறது.
காவிரி உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முதல்வா் ஜோசப் விஜய்தான் அதிகாரபூா்வமாக அறிவிப்பாா் என்றாா் அமைச்சா் ராஜ்மோகன்.
முன்னதாக பள்ளியில் சாதனைப் படைத்த மாணவா்களுக்குப் பரிசுகளை தமிழக அமைச்சா் ராஜ்மோகன் வழங்கினாா். இதில் பி.ரவிகுமாா் எம்எல்ஏ, அமலோற்பவம் பள்ளிக் குழுமத் தாளாளா் ச.அ.லூா்துசாமி, பத்திரிகை நிா்வாகி கே.வெங்கட்ராமன் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் இடம் பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.