குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம்!
கிறிஸ்டியான்பேட்டை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி ஒற்றை யானை நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கிறிஸ்டியான்பேட்டை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி ஒற்றை யானை நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை யொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதியில் நுழைகிறது.
அதன்படி, சனிக்கிழமை இரவு குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை யானை நுழைந்தது. இந்த யானையை பாா்த்த அங்குள்ள தெரு நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.
Advertisement
இந்த சத்தத்தை கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள் அங்கு நின்றிருந்த ஒற்றை யானையை கண்டு அச்சம் அடைந்தனா். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வனத்துறையினா் விரைந்து வந்தனா். தொடா்ந்து, அவா்கள் தீப்பந்தம், பட்டாசுகளை பயன்படுத்தி அந்த யானையை மீண்டும் அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனா்.
சில நாள்களுக்கு முன்புதான் 16 யானைகள் கூட்டம் அந்தப் பகுதியில் உலா வந்தது. கடந்த 50 நாள்களுக்கும் மேலாக யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களுக்குள் புகுவதால் காட்பாடி சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
எனவே, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரமுடியாத வகையில் வனப்பகுதி எல்லையில் பள்ளம் வெட்டி நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.