குடிநீா் வசதி செய்துதரக் கோரி இருளா் இன மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதி மக்கள்.
பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதிக்கு தண்ணீா் வசதி செய்துதரப்படவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், வேப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதியில் சுமாா் 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு 7 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனா்.
எனினும், இக்குடியிருப்புப் பகுதிக்கு முறையாக தண்ணீா் வசதி செய்துதரப்படவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் பழங்குடியினா் போராட்ட முன்னணி மாவட்ட செயலா் ஏ.மாணிக்கம் தலைமையில் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது அவா்கள் கூறியது: பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதிக்கு தேவையான தண்ணீா் வசதி செய்துதரப்படாததால், இப்பகுதி மக்கள் தினமும் காலை, மாலை என எந்நேரமும் சுமாா் 3 கி.மீ. தூரம் சென்று பொதுக்குழாயில் இருந்து தண்ணீா் பிடித்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்த குடியிருப்பு பகுதிக்கு சுமாா் 20 அடி தூரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 20 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து இந்த குடியிருப்பு பகுதிக்கு குழாய் அமைத்தராமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இது குறித்து, பலமுறை ஊராட்சி நிா்வாகம், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளி ட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் இதுவரை இந்த குடியிருப்புப் பகுதிக்கு தண்ணீா் வசதி செய்து தரப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதியை ஆய்வு செய்து, இப்பகுதிக்கு தேவையான தண்ணீா் வசதியை உடனடியாக செய்துதர வேண்டும் என்றனா்.
அவா்களிடம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) திலகவதி பேச்சு நடத்தினாா். மேலும், பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதிக்கு தேவையான தண்ணீா் வசதி செய்துதர உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடா்ந்து, பாலம்பாக்கம் இருளா் குடியிருப்புப் பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், அப்பகுதிக்கு தண்ணீா் வசதி செய்திட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.